Skip to main content

காவி உடை அணிந்த ஒருவர் எச்சில் துப்புகிறார், அந்த எச்சில் தமிழன்டா... -திருமுருகன்காந்தி

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
aneedhi

 

நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்து இருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கியிருக்கும் இப்படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.அப்போது விழாவில் கலந்துகொண்ட திருமுருகன் காந்தி பேசும்போது.... 
 

"இங்கு இருக்கும் அனைவரையுமே தோழர்களாக தான் பார்க்கிறேன். இந்தக்குறும்படம் விருதுகள் வாங்கியதற்காக நான் வரவில்லை. இந்தப்படத்தின் கதை தாங்கி நின்ற துயரம் நம் அனைவருக்கும் தெரியும். இந்தப்படத்தில் வந்த ஒருகாட்சி, "காவி உடை அணிந்த ஒருவர் பஸ்ஸில் போகும்போது எச்சில் துப்புகிறார். அந்த எச்சில் தமிழன்டா என்ற பனியன் போட்டிருந்த பையன் மீது விழுகிறது. இந்த ஒரு காட்சியே உண்மையை உணர்த்தி விட்டது. அனிதாவின் மரணத்தின் போது நான் சிறையில் இருந்தேன். சிறையிலே ஒரு கொந்தளிப்பான மனநிலையில் இருந்தேன். சிறையில் பல்வேறு குற்றங்களுக்காக கைதாகி இருந்த கைதிகள் ஒன்றுகூடி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தோம். சிறையில் இருந்தவர்களையே அந்த அளவுக்கு பாதிக்க செய்த சம்பவம் அது.

 

aneedhi


 

ஒரு தேசத்தில் அறம் இல்லாவிட்டால் அந்தத் தேசத்தின் மொழியில் உயிர் இருக்காது என்று ஒரு இலங்கை கவிஞர் சொன்னார். படைப்புலகம் இதுபோன்ற கொலைகளை பதிவு செய்யும் போதுதான் அது பரவலாகப் போய்ச்சேரும். எனக்கு ஒரு வருத்தம் உண்டு. 9 ஆண்டுகள் கடந்துவிட்டது ஈழத்தில் படுகொலைகள் நடந்து. இதுவரை அதைப்பற்றி ஒரு படைப்புகூட வரவில்லை என்ற வருத்தம் உண்டு. இந்தக் குறும்படத்தை கொங்கு மண்டலத்தில் எடுத்திருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் ஒரு அம்பேத்கர் சிலையை கூட பார்க்க முடியவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே மனுதர்மத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் கொஞ்சம் படித்தாலே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஊரும் சேரியும் இருக்கும் வரை இந்தச்சமூகம் முன்னேறும் தகுதியற்றது" என்றார்.