உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் இந்த கரோனா விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டுள்ளன, அதன் போக்கு சரிதானா என பல்வேறு கேள்விகளை முன்னாள் தமிழக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
நான்காம் கட்ட ஊரடங்கின் ஆரம்பத்தில் நாம் இருக்கிறோம். மத்திய மாநில அரசுகள் சில தளர்வுகளைப் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கிட்டதட்ட 50 நாட்களுக்கு மேலாக டாக் டவுன் நடைமுறையில் இருந்து வருகின்றது. 130 கோடி மக்களும் வீடுகளில் இருந்து வருகின்றோம். இன்னும் சில நாட்கள் ஊரடங்கு நீடிக்க உள்ளது. இவ்வளவு நாட்கள் ஊரடங்கு தேவையா என்ற கேள்வியைப் பொருளாதார வல்லுநர்கள் ஒருபுறம் எழுப்பினாலும், இத்தனை நாள் லாக் டவுன் செய்யப்பட்டும் நோயின் பாதிப்பு குறைந்துள்ளதா என்றால் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாறாக நோய்ப் பாதிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை விரைந்து அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கடந்த சில நாட்களில் ஒரே நாளில் 135க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பு ஆக 70 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டுள்ளது. 30 நாட்களுக்கு குறைவாக இரட்டிப்பு பாதிப்பு இருந்தாலே லாக் டவுன் தோல்வி என்று முடிவு செய்து கொள்ளலாம்.
தோல்வி என்றால் அதற்கு யார் காரணம், மக்கள் காரணமா அல்லது அரசாங்கம் காரணமாக இருக்கின்றதா? யாரை நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள்?
நான் மக்களைக் குறையே சொல்ல மாட்டேன். அதுவும் முதல் லாக் டவுனில் மக்கள் அற்புதமாக ஒத்துழைத்தார்கள். நானே என்னுடைய தொகுதியில் அதனை நேரில் பார்த்தேன். அந்த முதல் ஒரு மாதம் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால் அரசாங்கம் அதனைச் சரியான முறையில் செயல்படுத்தவில்லை. அதன் ஒரு பகுதியாகத்தான் கோயம்பேடு சம்பவம் நடைபெற்று முடிந்துள்ளது. அரசாங்கம் வியபாரிகள் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. இவர்கள்தான் அதனை முறையாக வழிநடத்தியிருக்க வேண்டும். வியபாரிகளைப் படிப்படியாக மாற்று இடத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
அதனை அவர்கள் செய்யத் தவறிவிட்டு, வியபாரிகள் மீது பழிபோடுகிறார்கள். ஒருங்கிணைப்பு இல்லாமல் இந்த அரசு செயல்படுகின்றது என்பது மட்டும் நிச்சயம். அதிகமாக டெஸ்ட் போடுகிறோம் என்கிறார்கள், அது உண்மையாக இருந்தாலும், ஆந்திராவைப் போல் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை விஸ்வரூபமாக இருக்கின்றது. சென்னையில் மட்டும் 65 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா சமூகப் பரவல் என்ற நிலையை அடைந்துவிட்டது என்ற உண்மையைச் சொல்ல மத்திய, மாநில அரசுகள் ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை.