பாஜக ஆட்சியின் ஒன்பது ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதைப் பற்றியும், அதற்கு அதிமுகவினரின் எதிர்வினைகளைப் பற்றியும் அரசியல் விமர்சகர் காந்தராஜை சந்தித்துப் பேசினோம். அவர் நமக்கு அளித்த பேட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவை.
தமிழர் பிரதமராக வேண்டும் என்றும், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதியில் பாஜக வெற்றி பெறுவதே இலக்கு என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளாரே?
ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில், தமிழகத்தில் 100 ஜென்மம் எடுத்தாலும் பாஜக வெற்றி முடியாது என்று பேசினார். அதனுடைய விளைவு தான் பாஜககாரர்கள் இன்றைக்கு தமிழை தூக்கி பிடித்து பேசி வருகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் திராவிட அரசியலை கையில் எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு புரிந்து விட்டது. அதனால் தான் எந்த இடத்திற்கும் போகாத அமித்ஷா இன்றைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவர்களின் நம்பிக்கைக்குரிய தேர்தல் ஆணையம் காலை வாரியதால் கர்நாடகத் தேர்தலில் தோல்வியை சந்தித்தார்கள். அதனால் தேர்தல் நேர்மையாக நடந்துவிடுமோ? என்ற பயத்தினால் இன்று அமித்ஷா ஒவ்வொரு மாநிலத்திலும் சென்று பூத் கமிட்டி வைக்க வேண்டும் என்று கூறி வருகிறார். தேர்தல் மட்டும் நேர்மையாக நடந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த இடத்திலும் பாஜக வெற்றி பெறாது. அமித்ஷா தமிழ்நாட்டிற்கு இத்தனை கோடி ஒதுக்கி இருக்கிறோம் என்று தான் கூறுகிறாரே தவிர அந்த பணத்தில் என்ன செய்தோம் என ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு அதிமுக தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்தி வருகிறார் அமித்ஷா. கூட்டணி கட்சியின் மீதே ஊழல் குற்றச்சாட்டு வைத்து வருகிறார். அந்த மருத்துவமனைக்கு ஒதுக்கிய ரூ. 9000 கோடி எங்கே சென்றது என்று கூற வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி உள்ளார். 25 தொகுதியையும் கைப்பற்றுவோம் என்ற அமித்ஷா பேச்சில், அதிமுகவுக்கு ஒற்றை இலக்கு எண் தொகுதியை தான் கொடுப்பார்கள் என்று தெளிவாக தெரிகிறது. இதை வைத்து பார்த்தால் பாஜகவின் அடிமை கட்சியாக தான் இருக்கிறது அதிமுக.
நாங்கள் எங்களுக்கு தேவையான இடங்களை வைத்துக்கொண்டு தான் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுப்போம் என்று செல்லூர் ராஜு முதற்கொண்டு அதிமுகவினர் கூறுகிறார்களே?
வேலுமணி, தங்கமணி போன்றவர்களெல்லாம் ஒரு ரெய்டில் காணாமல் போய்விட்டார்கள். அது போல தான் செல்லூர் ராஜு போன்ற இரண்டாம் கட்ட நபர்கள். ஒரு ரெய்டு நடந்தால் காணாமல் போய் விடுவார்கள். அதனால், செல்லூர் ராஜு முதற்கொண்டு மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். எடப்பாடி பழனிசாமியை அதைப் பற்றி பேச சொல்லுங்கள். அதிமுக எந்த தொகுதியிலும் போட்டியிட வேண்டாம். எங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவு மட்டும் தாருங்கள் என்று பாஜக சொன்னாலும் இவர்கள் செய்து ஆக வேண்டும். அதற்கு முடியாது என்று கூற இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? புரட்சி தாய் என்றெல்லாம் சொன்ன சசிகலா இன்றைக்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார். அந்த அளவிற்கு அதிமுகவினர் குடுமி எல்லாம் பாஜக கையில் உள்ளது” என்றார்.