Skip to main content

எதிரி யார் என்று சூர்யா சொல்லாதபோதே அவர்களின் மொத்த கூடாரமும் நடுங்குகிறதே அது ஏன்..? -ஆளூர் ஷாநவாஸ் கேள்வி!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020
hjk

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலுசேர்த்தது.

 

இதுஒருபுறம் இந்திய அளவில் விவாதம் ஆன நிலையில் நீட் தொடர்பான அழுத்தத்தில் தமிழக மாணவர்கள் மூவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தன. இதுஒருபுறம் அனலாக எரிந்துகொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அனல் கக்கும் வார்த்தைகளை கொண்ட இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டார். அரசியல் கட்சிகளையும் தாண்டி நடிகர் சூர்யாவின் அறிக்கை இந்திய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக அவரை கண்டித்தது. முக்கிய தலைவர்கள் எல்லாம் சூர்யா சினிமாவில் வசனம் பேசுவதைபோல் பேசக்கூடாது என்று கடுமையான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி பேசினார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுகின்றபோது நாம் சில மாணவர்களை இழந்து வருகின்றோம். இது தமிழகத்தில் சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் நிகழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வு மனுநீதியை திரும்ப கொண்டு வரும் தேர்வு என்று கடுமையான வார்த்தைகளுடன் நடிகர் சூர்யா தன்னுடைய கருத்துகளை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது போன்ற பல்வேறு கேள்விகளை அவர் அதிரடியாக அதில் கேட்டுள்ளார். அவர் புரியாமல் பேசுகிறார், அதில் உண்மையல்ல என்று எதிர்தரப்பினர் ஊடகங்களில் எதிர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

யார் சொல்கிறார் என்பது மிக முக்கியம். அவர் என்ன தவறாக பேசிவிட்டார் என்பதை ஆதாரம் இருந்தால் சொல்ல வேண்டியது தானே? எல்லாவற்றையும் குறை சொல்லும் மனநிலையில் உள்ளவர்கள்தான் அவரின் கருத்தை தவறு என்று சொல்ல முடியும். சூர்யா இந்த தேர்வுக்கு இந்த கட்சிகள்தான் காரணம் என்று சொல்லிவிட்டார் என எந்த கட்சியாவது கூறியுள்ளதா என்றால் இல்லை. கட்சிகள் அவரின் கருத்தை எப்படி பார்க்கிறோம் என்றால் நாங்கள் சுமந்து வருகின்ற கருத்துக்கு அவர் வலு சேர்ப்பதாகத்தான் பார்க்கிறோம். அரசியல் கட்சி இந்த பிரச்சனையை கையாள்வது போல் அவர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அவருக்கு எந்த வழிமுறை பிடித்துள்ளதோ அந்த முறையில் அவர் தன்னுடைய கருத்துகளை தெரிவிக்கிறார். அதனை நாம் வரவேற்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர் இப்படி சொல்லாமா, இவ்வாறு ஏன் கூறினார் என்று கேள்வி எழுப்புவது எல்லாம் சரியான முறையாக இருக்காது. ஆனால் நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் தொடர்ந்து முறையற்ற குற்றச்சாட்டுக்களை சூர்யா மீது வைக்கிறார்கள். 

 

எதிரி யார் என்று கூறாத போதே சூர்யாவின் கருத்துக்கு எதிரிகள் நடுநடுங்குகிறார்களே? அது ஏன், அவரை இதற்காக எதற்காக தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்கள். அப்படி என்றால் அவரின் கருத்தை இவர்களால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றுதானே அர்த்தம். அவர்களின் மொத்த கூடாரமே கலகலக்கின்றதே ஏன்? சூர்யா எதிரி யார் என்று நேரடியாக சொல்லவில்லை. எந்த கட்சி பெயரையும் குறிப்பிடு அவர் எதுவும் கூறவில்லை. எந்த ஆட்சி பெயரையும் கூறவில்லை. ஆனால் தற்போது யாரெல்லாம் சூர்யாவை எதிர்க்கிறார்கள். யாரெல்லாம் நடிகர் சூர்யாவை தனிப்பட்ட தாக்குதலை தொடுக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். கடந்த 2017ம் ஆண்டு நீட் குறித்து ஒரு புத்தகத்தை அகரம் நிறுவனம் வெளியிட்டதாக நடிகர் சூர்யா மீது குற்றச்சாட்டை சிலர் முன்வைக்கிறார்கள். அவர் அப்போது அதனை ஆதரித்தார் என்று வைத்துக்கொண்டாலும், தற்போது இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் நீட் தேர்வு தேவையில்லை என்று புரிந்துகொண்ட பிறகு அதனை எதிர்க்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது.

 

அந்த புத்தகத்தை யார் வெளியிட்டது, பாஜக தரப்பில் யாராவது வெளியிட்டார்களா? சமூக நீதி பேசும் இயங்கங்கள் தான் அந்த வெளியீட்டு விழாவில் இருந்ததன. தற்போது அதன் கொடூரம் தெரியவந்த பிறகு அதனை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள். இதில் என்ன தவறு இருந்துவிட போகின்றது. நடப்பது தவறு என்று தெரிந்த பிறகும் கூட ஒரு தவற்றை எதிர்த்து யாரும் பேசக்கூடாது என்றால் அது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை. நீட் தேர்வை எதிர்கொள்ளும் சவால்கள் என்பதுதான் அந்த புத்தகத்தின் தலைப்பே, எனவே அதை ஆதரவு என்ற தளத்தில் இருந்து பேசுவதே முதலில் தவறான ஒன்று. இதை விட்டுவிட்டு அவர் அன்றைக்கு ஆதரித்தார் என்று பேசுவதெல்லாம் ஒரு அர்ப்பதனமான விஷயம். எனவே நடிகர் சூர்யாவுக்கு நம்முடைய ஆதரவினை வழங்குவதே இந்த விஷயத்தில் நாம் அனைவரும் செய்ய வேண்டிய ஒன்றாக பார்க்கிறேன்.