Skip to main content

"விவாதங்களில் நம்பிக்கை இல்லாத பா.ஜ.க.வினர் நம்மைச் சீண்ட பார்க்கிறார்கள்" - ஆளூர் ஷாநவாஸ் பேச்சு!

Published on 22/05/2020 | Edited on 27/05/2020

 

jh


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,
 


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகின்ற நிலையில், அந்த விவாதத்தில் பேசிய ஜோதிமணி, எதிர்க்கட்சிகள் மக்களுக்கு இந்தக் கரோனா நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் பிரதமர் உள்ளிட்டவர்களைப் பொதுமக்கள் கல்லால் அடித்திருப்பார்கள் என்று பேசினார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

எட்டுவழிச்சாலை தொடர்பாக பேசிய மன்சூர் அலி கான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் எட்டு பேரை வெட்டுவேன் என்று பேசி இருந்தார். அவர் எட்டுப்பேரை வெட்டக்கூடிய ஆளா? வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் பேசினார் என்று அவரை கைது செய்தீர்கள். ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் நாக்கை அறுப்பேன் என்று கூறினாரே அதை எந்தப் பட்டியலில் வைப்பீர்கள். வைரமுத்துவின் தலை இந்நேரம் தரையில் உருண்டிருக்க வேண்டாமா என்று ஹெச்.ராஜா கேட்டாரே, அதை எந்தப் பட்டியலில் சேர்ப்பீர்கள். இந்துக்களைப் பற்றி இனி யாரேனும் பேசினால் அவர்களின் தலையை எடுத்து வர வேண்டும் என்று நயனார் நாகேந்திரன் பேசினாரே அதை எந்தப் பட்டியலில் சேர்க்க முடியும். 
 

 


என்னால் இது மாதிரி பெரிய பட்டியல் போட முடியும். ஆனால் அவர்கள் மீது எல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும் என்ற நேரடி பொருள்பட ஜோதிமணி பேசவில்லை. நாங்கள் உதவி செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் தன்னுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். அதை அவர் தவிர்த்திருக்கலாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஏனென்றால் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறதோ அப்படி நாம் ஆகிவிட கூடாது என்பதே நம்முடைய நிலைப்பாடு. எனென்றால் நாம் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. நாம் எப்போது தவறாகப் பேசி அவர்கள் வலையில் விழுவோம் என்று காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் நாம் வலை விரித்து அவர்களை நம் வலையில் விழ வைக்க வேண்டும். 

எனென்றால் உரையாடல்களின் மீது அவர்களுக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனால், ஜோதிமணிக்கோ, நமக்கோ, காங்கிரஸ் தரப்புக்கோ உரையாடல்களின் மீது நம்பிக்கை இருக்கின்றது. எப்படிப்பட்ட விவாதங்களிலும் நம்முடைய கருத்தை எடுத்து வைக்கலாம் என்ற எண்ணம் உடையவர்கள். ஆனால் அவர்கள் அப்படிப்பட்டவர்களா என்றால் நிச்சயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை. நம்முடைய வாயில் இருந்து ஒரு வார்த்தையைப் பிடுங்கி அதை வைத்து அரசியல் செய்யப் பார்ப்பார்கள். அவர்களின் எண்ணத்திற்கு நாம் துணை போகிவிடக் கூடாது.
 

http://onelink.to/nknapp


ஜோதிமணியின் ஒரு வார்த்தை அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்த வார்த்தையை வாபஸ் வாங்கச் சொல்வதும், இல்லையென்றால் அந்த அரங்கை விட்டு வெளியேறுவது தானே ஜனநாயக முறை. அதை ஏன் அவர் செய்ய மறுத்தார். ஆனால் கரு.நாகராஜன் எந்த எல்லைக்கும் சென்றார். ஜோதிமணி அரசியல் ரீதியாக வைத்த விமர்சனத்துக்குப் பதில் சொல்லாமல் தனி மனித தாக்குதலுக்கு அவர் சென்றார். இது கண்டிக்கத்தக்க ஒன்று. இதனை பா.ஜ.க. தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது, என்றார்.