லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் அரசியல் பினாமிகள் மட்டுமே சிக்கியுள்ள நிலையில், தற்போது அரசு அலுவலர்கள் மட்டத்திலுள்ள பினாமிகளும் சிக்கியுள்ளனர். கே.பி.அன்பழகனின் ஆல் இன் ஆலாக இருப்பது பேராசிரியர் மாறவர்மன்தான் என்கிறார்கள் பேராசிரியர்கள். உயர்கல்வித் துறையில் எதுவாக இருந்தாலும் இவர் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்ற அளவிற்கு அமைச்சரின் விசுவாசியாக இருந்துள்ளார்.
உயர்கல்வித் துறை இயக்குநர் பதவிக்கு 2013-லிருந்து 2021-ம் ஆண்டுவரை நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாறவர்மன் மூலமாக ஒரு கோடி ரூபாயைக் கொடுத்து பணிக்கு வந்தவர்களே என்று பேராசிரியர்கள் குமுறுகிறார்கள். அன்பழகனுக்கு முன்பாக இருந்த அமைச்சர் பழனியப்பன், செந்தமிழ் செல்வி மற்றும் மாறவர்மன் செய்த ஊழல்களைக் கண்டறிந்து மாறவர்மனின் மீது நடவடிக்கை எடுத்தார். அதன்பிறகு வந்த அமைச்சரான கே.பி.அன்பழகனுடன் கைகோர்த்த மாறவர்மன், மீண்டும் வேலையைக் காட்டத் தொடங்கினார்.
அந்த வகையில், தமிழகம் முழுவதுமுள்ள அரசுக் கல்லூரிகளில் 3,900 கௌரவ விரிவுரையாளர்கள் இருந்த நிலையில், மேலும் 600-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரை யாளர்களை, ஒருவருக்கு 15 லட்சம் ரூபாயை நிர்ணயித்து பணி நியமனம் செய்துள்ளனர். மொத்தமுள்ள 4,500 கௌரவ விரிவுரையாளர்களில் 1000 பேருக்கு மட்டுமே பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி, ஒவ்வொருவரிடமும் பாடப்பிரிவுக்கு தகுந்தாற்போல 15 முதல் 25 லட்சம் வரை பணம் பெற்று அதற்கான ஜி.ஓ. போடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. ஆனால் கௌரவ விரிவுரையாளர்களைப் பொறுத்தவரை அந்த கல்லூரிகளில் ஒரு குழு அமைத்து முதல்வர் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும். ஆனால் இந்த பணியிடங்களில், அமைச்சர் கே.பி அன்பழகனின் பெயரில் மாறவர்மன் அனுப்பும் மெயிலில் உள்ள நபர்களையே பணி நியமனம் செய்துள்ளனர்.
அதேபோல, அரசு உதவிபெறும் 250 கல்லூரிகளில், 3,500 உதவிப் பேராசிரியர்களின் பணியிடம் நிரப்பப்பட்டதில் ஒவ்வொரு நபருக்கும் ரூ.15 லட்சம் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து 1,500 தனியார் கல்லூரிகளில், புதிதாகத் தொடங்கப்பட்ட 250 கல்லூரிகளுக்கு, ஒரு கல்லூரிக்கு ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.
மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும் புதிதாக துறையை உருவாக்கவேண்டும் என்றால், ரூ.10 லட்சம் என நிர்ணயித்து 5,000 துறைகளை புதிதாக உருவாக்கியுள்ளனர். இது மட்டுமா? தமிழகத்திலுள்ள 148 அரசுக் கல்லூரிகளில் 100 கல்லூரிகளின் முதல்வர்களையும், 11 கல்லூரி கல்வி இணை இயக்குனர்களில் 7 பேர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 10 பேர் என மாறவர்மனால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், தான் நினைத்ததை மாறவர்மனால் சாதிக்க முடிகிறது.
தமிழகம் முழுவதும், சென்னை முதல் திருச்சி வரைக்கான பொறுப்பை, கௌரவ விரிவுரையாளரும், அ.தி.மு.க. வட சென்னை மாணவரணிச் செயலாளருமான ஆர்.தேவகிரன் மற்றும் கௌரவ விரிவுரையாளர் அருணகிரி, கோவை மண்டலத்திற்கு கௌரவ விரிவுரையாளர் வசந்த், உயர்கல்வித் துறை சூப்பிரண்டென்ட் பூபேஷ் என நான்கு பேரும் தங்களுக்குள் பகுதி பிரித்துக்கொண்டு பணம் வசூலித்து மாறவர்மனிடம் சென்னை ஈ.சி.ஆர். சாலையில் ஒப்படைப்பார்களாம்.
இப்படி ஒருநாள் பணப்பரிமாற்றம் செய்யச் செல்லும்போது தேவகிரன் கார் விபத்தில் சிக்கினார். அந்த காரில் பூர்ணசந்திரன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு செய்திகளிலும் வெளிவந்தது. அமைச்சரின் பினாமியாக இருக்கும் மாறவர்மன், அந்தமான் நிகோபர் தீவில் தனது தம்பி மனைவியின் பெயரில் ரூ.300 கோடி சொத்து வைத்துள்ளாராம். மேலும், ஆத்தூர் டூ சேலம் சாலையிலுள்ள வைகை கல்லூரி அருகாமையில் 25 ஏக்கர், சேலம் அழகாபுரத்தில் அப்பார்ட்மென்ட், பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்பாக ஒரு அப்பார்ட்மென்ட், சென்னை பெருங்குடியில் வீடு, ஒய்.எம்.ஆர். கல்வி அறக்கட்டளை, பவுண்டேஷன், கன்ஸ்ட்ரக்ஷனில் ரூ.100 கோடி மற்றும் 3 கார்கள் மாறவர்மனின் சொத்தாக உள்ளன.
2008-ம் ஆண்டு உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்த இவருக்கு 2018 வரையிலும் ரூ.40 ஆயிரம்தான் மாதச் சம்பளமாக இருந்துள்ளது. இதில் அவர் 10 வருடத்தில் வருமான வரி, அரசு பிடித்தம், இதரச் செலவுகளெல்லாம் போக கையிருப்பாக சுமார் ரூ.15 லட்சம் வரையே சேமித்திருக்க முடியும். அடுத்த மூன்றாண்டுகளில், மாதச் சம்பளம் 1 லட்சம் ரூபாய் என்ற கணக்கில், அனைத்துப் பிடித்தம், செலவுகள் போக சுமார் 12 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தியிருக்க முடியும்.
இவ்வளவு மட்டுமே சம்பாதிக்க முடிந்தவரால் பல நூறு கோடி மதிப்பிலுள்ள சொத்துக்களை எப்படி வாங்க முடிந்தது? தற்போது இவர் மூலமாகப் பலன்பெற்ற உயரதிகாரிகளும் சிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.