ஞாயிறன்று சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது அ.ம.மு.க.வினரின் வரவேற்பு எப்படி இருக்கும், சசிகலாவை அ.தி.மு.க. நிர்வாகிகள் ரகசியமாக சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்புகள் ஆளுந்தரப்பிடம் நிறைந்திருந்தன. டிஸ்சார்ஜாகி வந்த சசிகலாவோ, அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்ட, ஜெயலலிதா பயன்படுத்திய காருடன் வெளியே வந்து தமிழக அரசியலில் ஒரு பெரிய புயலைக் கிளப்பியிருக்கிறார்.
சசிகலா சிகிச்சை பெற்று வந்த விக்டோரியா மருத்துவமனை, பாதுகாப்புக்குப் பெயர் பெற்றது. பெங்களூரு நகரின் பெரிய கரோனா சிகிச்சை மையமான விக்டோரியா மருத்துவமனையில் நிறைய கரோனா நோயாளிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், பாஜகவைச் சேர்ந்த கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பாவின் மகன் ஆகியோர் டெல்லியில் இருந்து வந்த உத்தரவின்படி சசிகலாவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைத்துவிட்டனர். சசிகலா சிகிச்சை பெற்று வந்த கரோனா வார்டுக்கு அவரை பார்க்க 50க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் எளிதாக வந்து செல்லும் அளவுக்குப் பாதுகாப்பு கெடுபிடிகள் எளிதாக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த பெங்களூரு பத்திரிக்கையாளர்கள் வாயடைத்துப் போனார்கள்.
காலை 9.30 மணிக்கு சசிகலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இன்று வீட்டிற்குப் போகலாம் என்று சொன்னார்கள். உடனே சசிகலாவின் உறவினர்கள் ஜோதிடர்களைத் தொடர்புகொண்டார்கள். சரியாக 12 மணிக்கு மேல் சசிகலா புறப்படலாம், அதுதான் நல்ல நேரம் என்று ஜோதிடர்கள் சொல்ல, சசிகலா புறப்பட தயாரானார். அப்போது, ஜெயலலிதா பயணித்த கார் சசிகலாவுக்காக வந்தது. அந்தக் காரில் கரோனா நோய் தடுப்புக்காக ஓட்டுநருக்கும், சசிகலாவுக்கும் இடையே பாலித்தீன் ஷீட் மறைப்பு போடப்பட்டிருந்தது. அந்தக் காருடன் 10க்கும் மேற்பட்ட வண்டிகள் அணிவகுத்து வந்தன. அதனால் காவல்துறைக்கும் சசிகலாவின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதை சசிகலாவுக்கு பாதுகாப்பு தருவதற்கென உருவாக்கப்பட்டிருந்த மன்னார்குடியைச் சார்ந்த சஃபாரி வீரர்கள் படை சமாதானப்படுத்தியது.
அதன் பிறகு நைட்டியுடன் சசிகலா வெளியே வந்தார். அவரை பார்ப்பதற்கு என மூவாயிரம் பேர் (அ.ம.மு.க) அ.தி.மு.க. நிறத்திலேயே கரை வேட்டி கட்டியபடி காத்திருந்தார்கள். ‘சின்னம்மா வாழ்க’ என்கிற கோஷத்துடன் புறப்பட்ட சசிகலா, நேராக பிரஸ்டீஜ் கோல்டு ஹோட்டலுக்குச் சென்று தங்கினார். பெங்களூருவில் இருந்து நந்தி ஹில்ஸ் போகும் வழியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் இரண்டு சொகுசு குடில்கள் சசிகலா தங்குவதற்காக முப்பது நாட்களுக்கு புக் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு குடிலின் ஒருநாள் வாடகை ஒன்னேகால் லட்சம் ரூபாய். கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டு புக் செய்யப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் சசிகலா வெறும் 5 நாட்கள் மட்டுமே தங்குகிறார்.
சசிகலா வருகை மீடியாக்கள் வழியே பரபரப்பை உருவாக்கிய நிலையில், அ.தி.மு.க. கொடியுடன் வருவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரும், கே.பி.முனுசாமியும் பத்திரிகையாளர்களிடம் சொன்னார்கள். இது சரியா என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்டோம், "சசிகலா அ.தி.மு.க. கொடியுடன் வருவதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரு பொதுக்குழுவை நடத்தி, அதற்கு முன்பு நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை பதவியில் இருந்து நீக்கினார்கள். அதை எதிர்த்து அதே நவம்பர் மாதம் 2017ம் ஆண்டு சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் என்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது தவறு. என்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸூம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தங்களை நியமித்துக்கொண்டார்கள். என்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களே நியமித்துக்கொண்ட பதவிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு போட்டிருந்தார். அந்த வழக்கு இன்றுவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. அதற்கு ஒரு முடிவு வரவில்லை.
அதேபோல், அந்தப் பொதுக்குழுவைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓபிஎஸ்ஸூக்கும் இரட்டை இலை சின்னத்தை வழங்கியது. அதை சுப்ரீம் கோர்ட்டும் அங்கீகரித்தது. சிறையில் இருந்ததால் அதை எதிர்த்து வழக்கு போட சசிகலாவால் முடியவில்லை. இப்போது அந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து வழக்கு போட சசிகலா முடிவு செய்துள்ளார். எனவே அவரை பொறுத்தவரை அவர்தான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர். அவர் இன்று கட்சி கொடியைப் பயன்படுத்துகிறார். நாளை அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்துக்கே வந்து பொதுச்செயலாளர் என ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமருவார். அதை யாரும் தடுக்க முடியாது'' என்றார்.
இதற்கிடையே அவைத் தலைவர் மதுசூதனன், ஓபிஎஸ் ஆகிய இருவரும்தான் தேர்தல் ஆணையத்தில் சசிகலாவை நீக்கி உத்தரவு பிறப்பித்த பொதுக்குழுவிற்குத் தலைமை தாங்கியவர்கள். அதில் ஓபிஎஸ், அவரது மகன் ஜெயபிரதீப் மூலம் சசிகலாவை வரவேற்று அறிக்கை கொடுத்துவிட்டார். இந்நிலையில், மதுசூதனனை நெருங்குவதற்கு சசிகலா தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பீரங்கியாக செயல்படும் ஜெயக்குமாரை மதுசூதனனுக்கு அறவே பிடிக்காது. ஜெயக்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி தரும் முக்கியத்துவம் மதுசூதனனை கோபமடையச் செய்துள்ளது. சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமிக்கு பக்கத்தில் அவருக்கு சமமாக ஜெயக்குமாருக்கு நாற்காலி வழங்கப்பட்டதற்காக, ஜெயலலிதா நினைவு இல்ல திறப்பு விழாவில் கட்சிக்காரர்கள் முன்னிலையிலேயே எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்தார் மதுசூதனன்.
இதைப் பயன்படுத்தி மதுசூதனனை தங்கள் பக்கம் கொண்டுவந்து ஓபிஎஸ், மதுசூதனன் ஆகிய இருவரையும் வைத்து தேர்தல் ஆணையத்தில் மறுபடியும் சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என மனு போடலாமா என்று சசிகலா தரப்பு காய்களை நகர்த்த தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக கட்சிகாரர்களிடமும் தொழிலதிபர்களிடமும் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும் சசிகலா, முதல்கட்டமாக தான் தங்கியிருக்கும் சொகுசு குடியிருப்பில் உறவினர்களை அழைத்து அடுத்தக் கட்ட நகர்வுகளைப் பற்றி பேச இருக்கிறார்.
இந்த நகர்வுகளின்போது உறவினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என சசிகலா அவர்களுக்குப் புரியவைக்கப் போகிறார். இதுவரை பல விஷயங்களை சசிகலாவின் கவனத்திற்கு உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர். அதற்கெல்லாம் ‘நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் காத்திருங்கள்’ என்று மட்டும் சசிகலா பதில் சொல்லி வருகிறார். இனிமேல் டிடிவி.தினகரன் உட்பட யாரும் பேச மாட்டார்கள். சசிகலாதான் பேசுவார்.
பிப்ரவரி 5ம் தேதி இளவரசி விடுதலை ஆகிறார். அவருடன் கிளம்பி சென்னைக்கு வரும் சசிகலாவை சந்திக்க, அ.தி.மு.க.வின் வி.ஐ.பி.க்கள் பலர் தயாராக இருக்கிறார்கள் என நம்பிக்கையுடன் சொல்கிறது மன்னார்குடி வட்டாரம். அதே நேரத்தில் சசிகலா வருவதற்குள் தேர்தல் கூட்டணி பேரங்களை முடித்துவிட்டு தேர்தலுக்குத் தயாராக எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அவர் என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும், அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி மோதலுக்கு துணிந்து களம் காண தொடங்கிவிட்டார் சசிகலா.
எடுத்த எடுப்பிலேயே கொடியைப் பறக்கவிட்டு தன் இயல்பைக் காட்டத் தொடங்கியுள்ளார் சசிகலா. இனி போகப்போக ஆட்டம் ஆரம்பமாகும் என்கிறார்கள் அ.தி.மு.க.வில் உள்ள அவரது விசுவாசிகள். எல்லா நகர்வுகளையும் உற்றுக் கவனித்து, அடுத்தக் கட்ட வியூகங்கள் பற்றி ஆலோசித்து வருகிறது அ.தி.மு.க.வின் டெல்லி எஜமானரான பா.ஜ.க.