
பல நாட்களாக அமைதி வழியில் போராடி வரும் எளிய விசைத்தறியாளர்களின் கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்த்து, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கூலி உயர்வை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “கோவை மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் லட்சக்கணக்கான விசைத்தறியாளர்கள், கூலி உயர்வு கேட்டு கடந்த 30 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து நெசவு கூலி இறுதி செய்யப்படும். ஆனால் 2022 ஒப்பந்தக் கூலியை முழுமையாக வழங்காமல் குறைத்து வழங்கப்படுவதால், விசைத்தறியாளர்கள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்துடன், மின்கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான புதிய கூலி உயர்வு கேட்டு தொடர்ந்து பல முறை முறையிட்டும் சரியான தீர்வு கிட்டாததால், உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்காமல் இருப்பதால் அப்பகுதியின் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, திமுக அரசு இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நியாயமான கூலி உயர்வை உறுதி செய்து விசைத்தறியாளர்களைக் காக்க வேண்டும் என பாஜக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.