Skip to main content

மலரும் புண்ணகை... மாணவர்களுக்கு இலவச சிகிச்சை; மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு

Published on 17/04/2025 | Edited on 17/04/2025

 

Su. Venkatesan praises Collector for helping to resolve students disorder

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் எத்துப்பல் பிரச்சனை உள்ள 600 பேரை தேர்வு செய்து அவர்களின் சிகிச்சைக்கு உதவியுள்ளார் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பாராட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் எத்துப்பல் பிரச்சனை உள்ள 600 மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து அவர்களின் பல் சிகிச்சைக்காக வாய்ப்புகளை உருவாக்கி உதவியுள்ளார்.  பொதுவாக எத்துப்பல் சரிசெய்தல் என்பது அழகு சம்பந்தப்பட்ட விசயமாக கருதப்பட்டு அது காப்பீடு மற்றும் அல்லது இலவச மருத்துவத்தில் சேர்க்கப்படவில்லை. சாதாரணமாக இந்த சிகிச்சையை மேற்கொள்ள 20 மாதங்களும் ஏறக்குறைய 30,000 ரூபாயும் குறைந்தது தேவை என்கிற நிலை உள்ளது. 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதை உணர்ந்து பள்ளிக் குழந்தைகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்த இந்த சிகிச்சைக்காக CSR நிதியை உருவாக்கி அதன் மூலம் 600 பேருக்கும் சிகிச்சைக்கும் , அவர்கள் தங்கள் பெற்றோரோடு இந்த சிகிச்சைக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து , உணவு ஏற்பாடுகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்துள்ளார். தற்போது 1 ஆண்டு சிகிச்சையை அவர்கள் முடித்துள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 

அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்பட எவ்வளவோ களங்களும் தேவைகளும் உள்ளது. அதனை உணர்ந்து செயல்படுகிறவர்களாக வெகு சிலரே இருக்கின்றனர். அவர்களின் செயல்களை பாராட்ட வேண்டியது நம் கடமையாகும். சிறந்த முன்னுதாரணத்தை வாழ்த்தி மகிழ்வோம்” என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்