அமித்ஷா விசிட்டின் போது, எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் சதித் திட்டம் அம்பலமாகியிருக்கிறது. முதல்வர், துணை முதல்வர், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின், பாண்டியராஜன், செங்கோட்டையன் ஆகியோர் அமித்ஷாவை விமான நிலையத்தில் வரவேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரவேற்பில் தங்கமணி, வேலுமணி ஆகியோர் உள்ள படங்கள் இடம்பெறவில்லை. உள்ளாட்சித் துறை சார்பாக அமித்ஷாவை வரவேற்க ஏகப்பட்ட விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில், துறை அமைச்சர் வேலுமணிக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. நிழலான சூப்பர் முதல்வர் வேலுமணியை ஏன் எடப்பாடி புறக்கணித்தார் என கேட்டதற்கு, ஒரு பெரிய வரலாற்றையே சொன்னார்கள் கட்சியினர்.
ஜெ. ஆட்சிக்காலத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக 60சி வரை கவனித்தது. ஜெ கணக்குக்குப் போனது 20-சி தான். இது முதல்வரின் செயலாளராக இருந்த ஷீலா ப்ரியா மூலம் ஜெ கவனத்திற்குப் போனது. மிச்சம் குறித்து அப்போதே வேலுமணியிடமும், சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷிடமும் விசாரித்தது போயஸ் கார்டன். வெங்கடேஷின் திருவிளையாடலை வேலுமணி எடுத்துரைத்தார்.
அடுத்த நாளே வேலுமணியிடம் இருந்து கட்சி நிதியாக 5 கோடி ருபாயை ஜெ புன்னகையுடன் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் முதல்வரா? வெங்கடேஷ் முதல்வரா? என சிரித்துக்கொண்டே கேட்டு வேலுமணியின் தொழில் துறை அமைச்சர் பதவியை பறித்தார் ஜெயலலிதா. அதன்பிறகு சசிகலா தயவில்- எடப்பாடி பாணியிலான தவழும் ராஜதந்திரத்துடன் மீண்டும் மந்திரி பதவியைப் பெற்றார் வேலுமணி.
உள்ளாட்சித்துறை அமைச்சரான பிறகு அவர் நடத்தும் ஏகபோக ராஜ்ஜியம் குறித்து, அறப்போர் இயக்கத்தின் மூலமாக நீதிமன்ற வழக்குகளாகி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதுபற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத வேலுமணிக்கு எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. சமீபத்தில் சசிகலா விவகாரத்தைப் பற்றி பா.ஜ.க. மேலிடத்திடம் விவாதிக்க தங்கமணியையும், வேலுமணியையும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க அனுப்பி வைத்தார் எடப்பாடி.
வடமாநிலத்தில் பா.ஜ.க. சந்திக்கும் தேர்தல் களுக்கான செலவை, தமிழகத்திலிருந்து அனுப்பும் கண்டெய்னர்கள் மூலம் சமாளிக்கிறார்கள். எக்ஸ்பெர்ட்டுகளான வேலுமணியும் தங்கமணியும் பியூஸ் கோயலை சந்திக்க கோவையில் இருந்து கொச்சின் வழியாக பெங்களுரு சென்று டெல்லி சென்றார்கள். அவர்கள் பியூஸ் கோயலிடம், சசிகலாவை சட்டமன்றத் தேர்தல் முடியும்வரை சிறையில் இருந்து விடுதலை செய்யக்கூடாது என எடப்பாடி வைத்த கோரிக்கையை சொன்னதுடன், பா.ஜ.க. கூட்டணியுடன் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்தால் வேலுமணி முதல்வர், தங்கமணி துணை முதல்வர் என தங்களது ஆசையையும் தெரிவித்துவிட்டு வந்தார்கள். பா.ஜகவுக்கு 60 சீட்டுகள், அதற்கான செலவாக, தொகுதிக்கு 100 என 6000சி கொண்ட கண்டெய்னர் என்பதெல்லாம் மேலிட ரகசிய விவகாரம்.
இதை கேள்விப்பட்டு ஷாக்கான எடப்பாடி தனது மத்திய அரசு தொடர்புகள் மூலம் தங்கமணிக்கு நெருக்கமான கல்வி நிறுவனத்தின்மீது வருமான வரித்துறை சோதனை நடத்த ஏற்பாடு செய்தார். அத்துடன் வேலுமணிக்கு கொடுத்திருந்த முக்கியத்துவத்தையும் குறைக்க ஆரம்பித்தார். கூடவே இருந்து வேட்டு வைக்கும் வேலுமணி, தங்கமணியைவிட ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்து கட்சியில் சீனியரான செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார். அதன் எதிரொலிதான் அமித்ஷா வரவேற்பில் மணியான அமைச்சர்கள் இருவரின் படங்களும் வீடியோக்களும் மிஸ்ஸிங் என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.
எடப்பாடியின் இந்த கோபத்தைக் குறைக்க அவரிடம் ஜக்கி வாசுதேவை பேச வைத்திருக்கிறார் வேலுமணி. எடப்பாடியோ, "அவர்கள் எனக்கு எதிராக செய்யும் சதித்திட்டத்திற்கு நீங்களும் உடந்தையா? மோடி-அமித்ஷாவிடம் அவர்களை சிபாரிசு செய்தீர்களா?'' என எடப்பாடி திருப்பிக் கேட்டாராம். "நான் கொங்கு மண்டலத்துக்கு மட்டுமின்றி, அனைத்து மக்கள் பிரிவுக்குமான முதல்வர் என மாற்றிக்கொண்டிருக்கிறேன். எனக்கு தங்கமணி தூரத்து உறவினர், அவரைப் பற்றியும் தெரியும், வேலுமணியைப் பற்றியும் தெரியும்.
வேலுமணி, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், தங்கமணி ஆகியோர் அ.தி.மு.க. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி வைத்திருக்கிறார்கள். இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்தால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என மறைமுகமாக மிரட்டுகிறார்கள். சசிகலாவோடும் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். எப்படியாவது முதல்வராகிவிட வேண்டும் என காய் நகர்த்துகிறார்கள். எல்லாம் எனக்கு தெரியும். இதெற்கெல்லாம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நான் பதில் சொல்வேன்.
பாஜகவை எப்படி சமாளிப்பது, சசிகலாவை எப்படி சமாளிப்பது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என் அதிரடி அரசியலை பார்க்கத்தான் போகிறீர்கள்'' என தனக்கு நெருக்கமானவர்களிடம் எடப்பாடி சொல்லி வருகிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் வேலுமணி தனக்கு நிகழ்ந்த புறக்கணிப்பை அவரை சந்தித்த பொள்ளாச்சி முன்னாள் எம்.பி.யிடம் கொட்டித்தீர்த்திருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க.வில் உள்வட்ட அரசியலை உற்று நோக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள்.