அண்மைக் காலமாக ஆடியோ லாஞ்ச்சிங் என்பது சினிமா ஹீரோக்களின் அரசியல் மேடையாக மாறி வருகிறது. "பிகில்' பட பாடல் வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், பேனர் கலாச்சாரத்தைப் பற்றி விமர்சித்து, அரசியலும் பேசியதுடன், பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ விவகாரத்தில் யார் யார் மீதோ வழக்கு போடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது போடவில்லை என தன் வேகத்தை வெளிப்படுத்திப் பேசினார். அதனை வரவேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், "நியாயமாகப் பேசியிருக்கிறார். வாழ்த்துகள்'' என்றார். ஆளுந் தரப்பு அமைச்சர்கள் விஜய் மீதும் கமல் மீதும் பாய, கமல் கோபமாகி தனது வழக்கமான பாணியில் அ.தி.மு.க. மீது பாய்ந்தார். சீமான், அமீர் ஆகியோரும் விஜய் பக்கம் ஆதரவு தெரிவித்தனர்.
பேனர் பலி பற்றி பேசினால் அ.தி.மு.க. தரப்பு இந்தளவு டென்ஷன் ஆவது ஏன்?
சென்னையில் ஆளுங்கட்சி பிரமுகர் ஜெய கோபால் வைத்த பேனரால் சுபஸ்ரீ மரணமடைந்தது தொடர்பான வழக்கு 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஆனால் 23-ம் தேதியே அந்த வழக்கை வேறொரு மனு மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ். சுபஸ்ரீ மரணமடைந்து 11 நாட் களாகி விட்டன. இன்னமும் போலீசார் பேனர் வைத்த குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை. சட்டவிரோதமாக பேனர் வைத்த ஆளும் கட்சி பிரமுகருக்கு உடந்தையாக செயல்பட்டு கடமை ஆற்றாமல் இருந்த மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆவேசமாகியிருக்கிறார். என்ன நடக்கிறது என்பதை அறிய நக்கீரன் களமிறங்கியது.
இறந்து போன சுபஸ்ரீ ஒரு மென்பொருள் கம்பெனி பொறியாளர் மட்டுமல்ல இயற்கை முறையில் அழகு சாதன பொருட்களை வீட்டிலேயே தயாரித்து உலகம் முழுவதும் அனுப்பும் கம்பெனியையும் நடத்தி வந்தார். அத்துடன் மனச்சோர்வு அடைபவர்களை ஆக்ரோஷமான நடனம் மூலம் குணப்படுத்தும் "ஸ்கூபா' நடனம் என்கிற அமெரிக்க நடனத்தின் சர்வதேச பயிற்சியாளர்.
மற்றவர்களின் மனச்சோர்வை நடனத்தின் மூலம் போக்கிய சுபஸ்ரீயின் மரண நிமிடங்கள் மறக்க முடியாததாகத்தான் இருந்தது என்கிறார், சுபஸ்ரீயின் மரணத்தை லைவ் ஆக பதிவு செய்த எப்.சி.ஏ. கார் டெக்கார்ஸ் என்கிற கம்பெனியில் வேலை செய்பவர். மதியம் 2.40 மணிக்கு சுபஸ்ரீ ஓட்டி வந்த யமஹா ரே என்கிற வண்டி மீது அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் அவரது மகன் சி.ஜெ.கார்த் திக், மேனகா ஆகியோரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து அந்த பேனர் வண்டியின் ஸ்டியரிங்கை அசைய விடாமல் தடுக்க, வலது கை தரையில் ஊன்றியது. அதே வேகத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் சிதறி ஓட சாலையில் தேய்த்தபடி முகம் சிதற இருபதடி தூரம் சென்ற சுபஸ்ரீயின் இடுப்பு பகுதி தொடங்கி முகம் வரை பின்னால் வட இந்தியரான மனோஜ் ஓட்டி வந்த தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. உடனே நாங்கள் விரைந்தோம். அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவரும் ஓடி வந்தார். இறந்து விட்டார் என நினைத்து அவர் மீது விழுந்த அதே பேனரை வைத்து மூடினோம். குளம் போல தேங்கி நின்ற ரத்தத்தில் நான் அக்காவென கத்தினேன். சுபஸ்ரீ "ம்' என முனகினார். உடனே அவரை அருகிலுள்ள காமாட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இறந்து விட்டார்'' என சுபஸ்ரீயின் இரத்தம் தோய்ந்த கடைசி நிமிடங்களை பதிவு செய்தார்.
"இந்த கொலைகார பேனர் பற்றி சுபஸ்ரீயின் மரணம் நடப்பதற்கு 24 மணி நேரம் முன்பே நான் கோவிலம்பாக்கம் ரேடியல் சாலை பகுதியின் மாநகராட்சி செயற்பொறியாளர் பாலாஜியிடம் புகார் செய்தேன். "அமைச்சர்கள் வருகிறார்கள். அப்புறம் எடுத்து விடுவார்கள்' என பாலாஜி சொன்னார். விபத்து நடந்த 12-ம் தேதி காலையிலும் போய் சொன்னேன். பாலாஜி எனது கோரிக்கையை கேட்கவில்லை. மதியம் நடந்த விபத்தில் சுபஸ்ரீ மரணமடைந்து விட்டார். சுபஸ்ரீயின் மரணத்திற்கு மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம்'' என்கிறார் பல்லாவரம்-துரைப்பாக் கம் ரேடியல் சாலைகளில் பேனர்கள் உள்பட சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கும் சர்வேயர் விஜய்ரஞ்சன்.
வழக்கை விசாரிக்கும் பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரிடம் விஜய் ரஞ்சன் பேசும் ஆடியோவை நமக்கு போட்டுக் காட்டினார். இதுபோல பேனர்கள் வைத்தால் உதவிப் பொறியாளர் பாலாஜி தனியாக சென்று கல்யாண மண்டப உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்குவார் என்றார். "மாநகராட்சி அதிகாரிகளின் மாமூல் வேட்டைதான் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமா?' என ஏ.இ.பாலாஜியிடமும் மண்டல அதிகாரி பாஸ்கரனிடமும் கேட்டோம். "நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளுங்கள்' என பதில் சொன்னதோடு, விஜய் ரஞ்சனையும் மிரட்ட ஆரம்பித்தார்கள். பயந்து போன விஜய் ரஞ்சன் அவர் சப்-இன்ஸ்பெக்டருடன் பேசும் பேச்சின் ஆடியோ பதிவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு சுபஸ்ரீயின் மரணத்திற்கு யார் காரணம் என சொல்லிவிட்டார்.
அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபாலுக்கு பேனர்னா அப்படி ஒரு வெறி. 2014-ல் என் கல்யாண மண்டபத்துல அவரது மகனுக்கு திருமணம் செஞ்சாரு. அப்ப திடீர்னு பாராளுமன்றத் தேர்தலும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்துச்சு. தேர்தல் ஆணைய விதிமுறைகளால் அவர் வைக்க நினைச்ச 1500 பேனரும் வேஸ்டாகிவிட்டது. அதனால இப்ப எங்க ஜே.டி. கல்யாண மண்டபத்துக்கு எதிரில் இருக்கிற சண்முகா டிஜிட்டல் பேனர் என்கிற கம்பெனியில் பேனர் அடிச்சார். நான் கூட அவர்கிட்ட, "ஏம்ப்பா இவ்வளவு செலவு பண்றேன்'னு கேட்டேன். "ஓ.பி.எஸ். வர்றாரு. கே.பி.கந்தன், தன்சிங், வெங்கட்ராமன் ஆகிய முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள்' என ஏகப்பட்ட பேனர்களை அவரது மச்சான் மேகநாதன் மூலமா வச்சாரு. அவர் அரசியல்வாதி. கட்சிக்காரர்களை வைத்து பேனர் கட்டினார். அவர்கள் சரியாக கட்டவில்லை. சுபஸ்ரீ மரண மடைந்து விட்டார். 2.45 மணிக்கு ஜெயகோபால் வைத்த பேனரினால் சுபஸ்ரீ இறந்து விட்டார் என்கிற செய்தி மாலை 5.30 மணிக்கு திருமண மண்டப வாடகை கொடுக்க வந்த ஜெயகோபாலுக்கு தெரியவில்லை'' என்கிறார் திருமண மண்டப உரிமையாளர் ஜெ. துரை.
இப்படி பேனர் வைத்தது அந்த பகுதியின் ஒட்டுமொத்த ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என சொல்கிறார்கள் பகுதி மக்கள். நாம் ஜெயகோபால் வீட்டுக்குச் சென்றோம். அவர் வீடு அமைந்த இடம் "கோபால் நகர்' என்றே அழைக்கப்படுகிறது. பக்கத்தில் உள்ள நகர் அவரது அப்பா சக்கரவர்த்தி பெயரில் அமைந்திருந்தது. அந்தப் பகுதியில் பெரிய ரியல் எஸ்டேட் பிரமுகராக வலம் வந்த ஜெயகோபால் சென்னை புறநகர் பகுதியில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தின் மூலம் அ.தி.மு.க. மா.செ.வான சிட்லபாக்கம் ராஜேந்திரன், தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டதால் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் மூலம் அவருக்கும் நெருக்கமானார். சிட்லபாக்கம் ராஜேந்திரன் மூலம் ஓ.பி.எஸ்.சின் அறிமுகம் ஜெயகோபாலுக்கு கிடைத்தது. திருமண விழாவிற்கு ஓ.பி.எஸ்.சை அழைத்து வந்ததும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தான். ஜெயகோபால் அ.தி.மு.க. என்றாலும் அவரது மனைவி குடும்பம் தி.மு.க. குடும்பம். அவரது மச்சான் மேகநாதன் மட்டும் தான் ஜெயகோபாலுடன் சுற்றி வந்தார்.
சுபஸ்ரீ இறந்த பிறகு கூட போலீசார் ஜெயகோபாலையோ மேகநாதனையோ தொடவில்லை. அவர்கள் எங்களுக்கே போக்கு காட்டினார்கள். இப்பொழுது தான் ஓட ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அவர்களை பிடித்துவிடுவோம்'' என்கிறார் சுபஸ்ரீயின் மரணத்தைப் பற்றி உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ரவிக்குமார்.
பேனர் தயாரிப்பு, அரசாங்க அதிகாரிகளின் அலட்சியம் ஆகியவற்றை பள்ளிக்கரனை போலீசின் சட்டம்-ஒழுங்கு பிரிவில் விசாரிக்கிறார்கள். சுபஸ்ரீயின் விபத்து, மரணம் குறித்து அடங்கிய முக்கிய வழக்கை போக்குவரத்து போலீசார் விசாரிக்கட்டும் என காவல்துறையின் உயரதிகாரி உத்தரவிடும் அளவிற்கு காவல்துறை விசாரணையில் முதலமைச்சர் உட்பட அமைச்சர்களின் தலையீடு இருந்தது என்கிறார்கள் காவல் துறையை சேர்ந்தவர்கள். ஜெயகோபாலும் மேகநாதனும் சிட்லபாக்கம் ராஜேந்திரனின் பாதுகாப்பில் இருந்தார்கள். அவர்களை போலீசார் விசாரணைக்கு ஆஜர்படுத்துவது அ.தி.மு.க.விற்கு பெரிய அவமானம் என அமைச்சர் ஒருவரே நேரடியாக பேசினார் என்கிறது காவல்துறை வட்டாரம்.
சுபஸ்ரீயின் மரணத்தை தமிழக அரசு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. சுபஸ்ரீயின் மரணம் நடந்த சில தினங்களுக்கு பிறகு கண்ணகி நகர் பகுதியில் ஜெயகோபாலை போலவே ஆபத்தான முறையில் அறுந்து விழும் பேனர்களை வைத்து விழா கொண்டாடினார் ஒரு அ.தி.மு.க. பிரமுகர். அதேபோல் முகப்பேர் பகுதியில் அ.தி.மு.க. பிரமுகர் ஐயனார் என்பவர் சட்டவிரோத பேனர் வைத்து விழா நடத்துகிறார் என அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த நக்கீரன் என்பவர் புகார் செய்தார். உடனே அந்தப் பகுதி மாநகராட்சி உதவிப்பொறியாளர் ரமேஷ் அ.தி.மு.க. பிரமுகர் ஐயனாரை நேரடியாக புகார் சொன்ன நக்கீரனிடம் பேச வைத்தார். "இந்த பேனர்களை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள் 48 மணி நேரத்திற்குள் பேனர்களை அகற்றலாம். அதற்குள் விழா முடிந்துவிடும். இந்த இடைவெளியில்தான் அ.தி.மு.க.வினர் விளையாடுகிறார்கள். 2017-ம் ஆண்டு இதுபோன்ற பேனர்களை வைக்கக்கூடாது எனத் தெளிவாக சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்துவிட்டது. அதை வசதியாக மாநகராட்சி அதிகாரிகள் மீறுகிறார்கள்'' என்கிறார் அறப்போர் இயக்கத் தலைவர் ஜெயராமன்.
சுபஸ்ரீயின் மரணம் நடந்த மறுநாள் 13-ம் தேதி இதுபோன்ற சட்டவிரோதமாக பேனர் வைத்து அதன்மூலம் மரணம் நிகழ்ந்தால் இந்த சட்டவிதி மீறலை அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது கடமையில் தவறினார்கள் என கிரிமினல் வழக்கு தொடரலாம். அவர்களுக்கு ஒரு வருட தண்டனை வழங்க கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என நீதியரசர்கள் சத்யநாராயணா, சேஷசாயி ஆகியோர் அடங்கிய பெஞ்சில் நான் வாய்மொழியாக கேள்வியெழுப்பினேன். இதில் தி.மு.க.வின் நிலை என்னவென நீதிபதிகள் கேட்டார்கள். உடனே 2017-ம் ஆண்டு முதல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேனர் கலாச்சாரத்திற்கெதிராக கொடுத்த அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். உடனே அரசு வழக்கறிஞர் முதல்வரும் துணை முதல்வரும் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிக்கை கொடுத்ததாக கூறினார். சுபஸ்ரீ மரணம் குறித்து பதில் சொல்ல உத்தரவிட்ட நிலையில், 23-ம் தேதி சுபஸ்ரீயின் மரணத்திற்கு எதிராக போராட்டம் நடத்த போலீசார் அனுமதி தரவில்லை என ஒரு பொதுநல வழக்கு நீதியரசர் ரமேஷ் முன்னிலையில் வந்தது. நீதியரசர் ரமேஷ் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான அரசு மற்றும் காவல்துறையினர் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்'' என்கிறார் வழக்கறிஞர் கண்ணதாசன்.
சுபஸ்ரீ மரணமடைந்த இடத்திற்கு நாம் சென்று பார்த்தபோது, பேனர் இருந்த கம்பத்தில் சி.சி.டி.வி. அமைக்கப்பட்டிருந்தது. ஜெயகோபால் வைத்திருந்த பேனர்கள் அந்த சி.சி.டி.வி.க்களை மறைத்தபடி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ரேடியல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி.க்கள் அனைத்தும் செயலிழந்து கிடந்தன. சுபஸ்ரீயின் மரணம் பேனர் விழுந்ததன் காரணமாக தான் நடந்தது என்பதை நிரூபிக்க அந்த சாலையில் இருந்த எஃப்.சி.ஏ. கார் டெக்கார்ஸ் என்கிற கடையில் இருந்த சி.சி.டி.வி. தான் உதவியது. அந்த சி.சி.டி.வி. பதிவு மட்டும் இல்லாமல் இருந்தால் சுபஸ்ரீ ஹெல்மெட் அணியாமல் சென்றார், அதனால் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என மூடி மறையுங்கள் என உத்தரவுகள் வந்தன. அதற்காகத் தான் சுபஸ்ரீ வழக்கை போக்குவரத்துத் துறையின் வழக்காக கொண்டு சென்றார்கள். ஆனால் கார் கடையில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகள் சில தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு கொடுக்கப் பட்டது என தெரிந்ததும் சி.சி.டி.வி. காட்சிகளில் சுபஸ்ரீ கருப்பு நிற ஹெல்மெட் அணிந்து செல்வது தெளிவாக பதிவாகியிருந்ததால் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஹெல்மெட் கதை செல்லாததாகி விட்டது என்கிறது காவல்துறை வட்டாரம். காவல்துறை, மாநகராட்சி என யாரும் இதுபற்றி வெளிப்படையாக வாய்திறக்க மறுக்கிறார்கள்.
காவல்துறை தேடும் போது குற்றவாளிகளான ஜெயகோபாலும், மேகநாதனும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் வலம் வந்ததாக அ.தி.மு.க.வினரே சொல்கிறார்கள். ஆனால் சுபஸ்ரீயின் மரணம் தமிழக மக்களின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. கொலையாளிகளை அ.தி.மு.க. அரசு பாதுகாப்பது பொதுமக்களிடம் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்திருக்கிறது தமிழகம்.
-அரவிந்த்