சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், தொண்டர்களிடம் தன்னுடைய கடந்த கால சம்பவங்களை மகிழ்ச்சியுடன் பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது "இன்றைக்கு நம்முடைய வளர்ச்சியை பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். பயம் இருக்கத்தானே செய்யும். நம்மை பார்த்து இங்கே இருப்பவர்கல் மட்டுமா பயப்படுகிறார்கள். பிரபாகரனை விட ஆபத்தானவன் ஒருவன் வளர்ந்து வருகிறான் என்று சிங்களவனும் பயப்படுகிறான். இது அனைத்தையும் விட்டுவிடுவோம். வருகிற தேர்தல் நமக்கு போர்க்களம், இறங்கி அடிப்போம். பயமா இருக்கா, முருகா முருகா என்று சொல்லுங்கள். அதை பாஜக நபர்களும் சொல்கிறார்களா? சரி விடு, தனியாக அமர்ந்துகொள், பிரபாகரன் பிரபாகரன் என்று தனியாக அமர்ந்து சொல்லுங்கள்.
இன்னமும் பயமாக இருக்கா, அரை கிலோ மாட்டுக்கறி எடுத்து சாப்பிடு. எல்லா சரியாகி விடும். நம்முடைய மருத்துவர் சிவராமன் இருக்கிறார், கண்டவன் பேச்சை எல்லாம் கேட்டு அசைவத்தை தவிர்க்காதீர் என்று கூறுகிறார். என் தம்பிகள் எல்லாம் இதை கேட்டு சிரிக்கிறார்கள். என் மனைவி இந்த பேச்சை கேட்டு இவர்தான் நம்முடைய மருத்துவர் என்று சந்தோஷப்படுகிறார். சில அறிவில்லாத பயல்கள் அதனை வேண்டாம் என்கிறார்கள். நோபல் பரிசு வாங்கியவன் எல்லாம் அதை சாப்பிட்டவர்கள்தான். ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய பெரும்பாலானவர்கள் அதை உண்டவர்கள்தான். வாய் இருக்கிறது என்று எதையாவது பேசக்கூடாது. மாட்டுக்கறி எடுத்து சாப்பிடுங்கள், ஜிம் போங்கள், உடம்பை வலுவாக்குங்கள். சுவர் இருந்தால் தான் நம்மால் சித்திரம் வரைய முடியும்.
என்னுடைய கராத்தே மாஸ்டர் இன்னும் இருக்கிறார். காலையில் 6 மணிக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்தால் 12 மணி வரை வகுப்பெடுப்பார். அவருக்கு ஈடுகொடுத்து பயிற்சி எடுப்பதெல்லாம் ரொம்ப கடினமாக காரியம். அதனால் அடுத்த நாள் வகுப்பு இருந்தால் முதல் நாளே 2 கிலோ மாட்டுக்கறி எடுத்து வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் பயிற்சிக்கு செல்வேன். நாங்கள் பயிற்சி ஆரம்பித்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் உறுதியோடு பயிற்சியை செய்வோம். ஆனால் எங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாஸ்டர் சோர்ந்து போய் விடுவார். அவ்வளவு வலிமை இந்த மாட்டுக்கறிக்கு இருக்கிறது. எனவே அவன் சொல்கிறான், இவன் சொல்கிறான் என்று அதை சாப்பிடுவதை தவிர்த்து விடாதீர்கள். உடலுக்கு வலிமையை தருவதோடு ஆரோக்கியத்தையும் அது அதிகப்படியாக வழங்கும்.
மாட்டுக்கறியை சாப்பிட்டாலே உடம்பில் ஒரு புதிய வலிமை பிறக்கும். தெம்பு கிடைக்கும், யாரையாவது தூக்கி போட்டு அடிக்க வேண்டும் என்று தோன்றுகிற அளவுக்கு எனர்ஜி கொடுக்கும். நீங்கள் என்னுடைய அண்ணன்களை எல்லாம் கேட்டுப்பாருங்கள். ஏவிஎம் வாசலில் எத்தனை நாள் களேபரம் நடத்திருக்கிறது என்று. பழைய சீமான் பெரிய ரவுடி, எதாவது பிரச்சனை என்றால் வண்டியை எடு பார்த்துக்கலாம் என்று கூறுவேன். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அதை எல்லாம் என்னால் செய்ய முடியவில்லை. கட்டுப்பாடு தேவைப்படுகிறது. அதனால் கட்டுப்பட்டு இருக்கிறோம். அதனால் தான் இன்றைக்கு என்னை பற்றி பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடிவதில்லை. இதை காரணமாக வைத்துக்கொண்டு மரியாதை இல்லாமல் சிலர் பேசுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை" என்றார்.