வரலாறு, ஆன்மிகம், ஜோதிடம், பிரபலங்களின் அறியாத பக்கம் எனப் பல தளங்களில் தன்னுடைய செறிவான கருத்துகளால் நம்மோடு உரையாற்றிவருகிறார் நடிகர் ராஜேஷ். அந்த வகையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்ட செய்திகளைப் பார்ப்போம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை சுட்ட வழக்கில் எம்.ஆர்.ராதாவை சிறையில் அடைத்தனர். அந்த சிறையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களால் என்னுடைய கட்சித்தொண்டனுக்கு ஆபத்து இருக்கிறது என்று தந்தை பெரியார் முறையிட்டு சில சிறப்பு அனுமதிகள் எம்.ஆர்.ராதாவுக்கு வாங்கித்தந்தார். ஆர்டர்லீ உதவியுடன் அவருக்கு உணவுகள் எல்லாம் தனியே சமைக்கப்பட்டது. சிறையில் அவர் அறையில் ஒரு பூனை வளர்த்தார். எந்த உணவாக இருந்தாலும் முதலில் பூனைக்கு கொடுத்து விட்டு தான் அவர் சாப்பிடுவார். அந்த அளவிற்கு எச்சரிக்கையாக இருந்திருக்கிறார்.
சிறையில் அவருக்கு கவர் ஒட்டுகிற வேலை கொடுத்தார்கள். அவர் தொண்டர்களும், ரசிகர்களும் அவரை ஒட்டவே விட மாட்டார்கள். நாங்கள் ஒட்டுகிறோம் அண்ணா... நீங்கள் எதற்கு இந்த வேலையைச் செய்கிறீர்கள் என்பார்கள். படத்தில் தான் அவர் வில்லன், சிறைக்குள் அவர் தான் ஹீரோ. சிறைக்குள் ஒரு செல்வாக்கு மிக்க மனிதராக இருந்திருக்கிறார். சிறைக்கு ஏதாவது புது அதிகாரிகள் வந்தால் அவர்கள் தான் இவரை வந்து சந்திப்பார்கள். இவராகப் போய் யாரையும் சந்தித்தது இல்லை.
திராவிடர் கழகத்தின் ஆதரவாளரான இவர் அந்தக் காலகட்டங்களில் ராமாயணத்தைக் கிண்டல் செய்து 'கீமாயணம்' என்ற நாடகத்தை நடத்தினார். ஆன்மீகவாதிகள் புண்படும்படியான காட்சிகள் அதில் நிறைய இருக்கும். ராமாயணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை நாடகத்தின் போது அருகிலேயே வைத்திருப்பார். யாராவது எதிர்த்தால் இந்தப் பக்கத்தில் இருக்கிறது பார் என ஆதாரத்தோடு காண்பிப்பார். அதே போல நாடகம் நடக்கும் போது இடையிடையே அணுகுண்டுகளை வெடிக்கச் செய்வார். அதற்கு அவர் சொல்லும் காரணம் வியப்பாக இருக்கும். "எல்லாம் வேலைக்கு போய் உழைச்சுட்டு வந்து அசதியா உட்காந்து இருப்பான். கொஞ்சம் விட்டோம் என்றால் தூங்கிடுவான்" என்பார். மேடையில் நடிக்கும் போது கல், முட்டை என கையில் கிடைத்ததை எல்லாம் எறிவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடிப்பார். ஒரு கட்டத்தில் இவருக்கு என்று தனியாகத் தணிக்கை அதிகாரிகளையே உருவாக்கி விட்டனர்.
அவர் படிக்காதவர் என சொல்லியிருக்கிறேன். சில நேரங்களில் அவர் புரிதல் சிரிப்பாக இருக்கும். தூத்துக்குடி, மன்னார்குடி, காரைக்குடி என்ற பெயர்களை வைத்து "என்னடா குடி..குடின்னு இருக்கு... அங்க இருக்குற பயலுக எல்லாம் குடிகாரனுகளா" என்பார். நமக்கு இது கேலியாகத் தெரியலாம். ஆனால் இதுவெல்லாம் தான் அவருக்கு சினிமாவில் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது.