இந்திய திரை இசையின் முக்கிய அடையாளமாக இருந்த பாடகர் எஸ்.பி.பி. சில தினங்களுக்கு முன்னால் இயற்கை எய்தினார். மரணம் குறித்தான தகவல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, மறுநாள் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்படுவது வரை அவர் இசையை கேட்டு ரசித்தவர்களின் மனங்களில் ஒரு கனம் குடிகொண்டது. பல தரப்பட்ட சாமானிய மக்கள் சாரைசாரையாக படையெடுத்து சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய காட்சிகளை நம்மால் பார்க்க முடிந்தது. இந்நிலையில் செறிவான கருத்து வளமிக்க நடிகர் ராஜேஷ், எஸ்.பி.பி குறித்து நம்மோடு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
"1968-ல் நான் சென்னை வந்தேன். அதன் பிறகுதான் அவர் அடிமைப்பெண், சாந்தி நிலையம் போன்ற படங்களில் பாடினார். சாந்தி நிலைய பாடல்களைக் கேட்கும்போது டி.எம்.எஸ். அண்ணன்தான் குரலை மாற்றிப்பாடுகிறார் என்று நினைத்தேன். பின்னர் அது எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல் என்றனர். அவர் குரலையும், பாடலையும் கேட்கும் போது அதில் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது. டி.எம்.எஸ்., திருச்சி லோகநாதன் போன்ற முன்னணி பாடகர்களின் அனைத்து உணர்வுகளும் எஸ்.பி.பி அவர்களிடம் ஒருசேர இருப்பதை நான் கண்டேன். 45 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். 12 மணி நேரத்தில் கன்னட மொழியில் 21 பாடல்கள் பாடியிருக்கிறார். ஒரே நாளில் தமிழில் 19 பாடல்கள் பாடியிருக்கிறார். 6 மணி நேரத்தில் இந்தியில் 16 பாடல்கள் பாடியிருக்கிறார். மொத்தமாக 16 மொழிகளில் பாடியிருக்கிறார். தேசிய விருது, மாநில விருது உட்பட பல எக்கச்சக்கமான விருதுகள் வாங்கியுள்ளார். அவர் மக்கள் மனங்களில் உயரிய இடத்தில் குடியிருந்தார் என்பது இந்த சாதனைகளையெல்லாம் விடப்பெரியது. அதை அவர் மரணமடைந்த போதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் நம்மால் பார்க்க முடிந்தது.
52 வருடம் ஒரு மனிதன் ஒரு துறையில் கோலோச்சுவது என்பது சாதாரண விஷயமில்லை. 52 வருடங்கள் திரையுலகத்தில் கோலோச்சியிருக்கிறார். அதேபோல மருத்துவமனையில் 52 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த எண்ணிக்கை எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அனைவருமே அவரை நல்ல மனிதன் என்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என எனக்கு வியப்பாக இருந்தது. இதயப்பூர்வமான உள்ளன்பு இருந்தால் மட்டுமே மக்களை சென்றடைய முடியும். 'அடக்கமாகும் வரை சிலருக்கு அடக்கம் வராது' என்பார்கள். ஆனால் எஸ்.பி.பி-யிடம் அடக்கமாகும் வரை அந்த பணிவு இருந்தது.
வாழ்க்கையில் ஒரு மனிதனை அவன் வயது பக்குவப்படுத்தும். எஸ்.பி.பி. அவர்களின் கடந்த கால புகைப்படங்களை பார்க்கும்போது, அந்த பண்பும், பணிவும் அப்போதிலிருந்தே அவருக்கு இருந்தது தெரிகிறது. திருடன் போலீஸ் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது எனக்கு பெரிய விஷயமாக உள்ளது. இனிமேல் ஒரு எஸ்.பி.பி வருவாரா? 52 ஆண்டுகள் கொடிகட்டிப் பறப்பாரா என்பதெல்லாம் சந்தேகம்தான். ஆண், பெண் என இனவேறுபாடு, மேல்தட்டு, கீழ்த்தட்டு என வர்க்க வேறுபாடு ஏதும் இல்லாமல் அனைவருக்கும் பிடித்தமானவராக அவர் இருந்ததே அவரது மிகப்பெரிய வெற்றி. டீவி சத்தம் கூட பலர் வீட்டில் சத்தமாக கேட்கவில்லை. அந்த அளவிற்கு சென்னையே அடங்கியிருந்தது. லாக்டவுனுக்குள் ஒரு லாக்டவுன் என்பது போலத்தான் இருந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய சந்தோசம்".
நேர்காணலின் தொடர்ச்சியை வாசிக்க...