மொத்தமாக இந்தியாவுக்கு ஒரு விலையை நிர்ணயித்து ப்ரைஸ் டாக் மட்டும்தான் தொங்கவிடவில்லை. மற்றபடி பொதுத்துறை நிறுவனங்களை விற்றும், அதன் பங்குகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்தும் தற்போதைய மத்திய அரசு அபூர்வ சாதனை புரிந்துவருகிறது. ஏற்கெனவே இருக்கும் பொருளாதார மந்தத்துடன், கரோனா கால வேலை முடக்கமும் சேர்ந்துகொள்ள மத்திய அரசு ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் பணிகளில் எக்ஸ்பிரஸ் வேகம் காட்டி வருகிறது.
கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் ரயில்வே பயணிகள் ரயில் சேவையை நிறுத்தியது. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கி வருகிறது. கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் சரக்கு வருவாய் குறைந்திருக்கிறது. கரானோவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் துவக்கியது.
அதன் ஒருபகுதியாக ஜூலை 2-ஆம் தேதி பாதுகாப்பு சம்பந்தப்படாத பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் நிரப்பப்படாமல் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என அறிவித்தது. இதற்கு முதல்நாள், ஜூலை 1-ம் தேதி 224 ரயில்கள் விற்பனைக்கான ஏல அறிவிப்பை வாரியம் வெளியிட்டது. இந்த அறிவிப்பை இதனோடு சேர்த்து பார்க்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
இந்த உத்தரவையடுத்து அனைத்து ரயில்வே மண்டலங்களும் பாதுகாப்பு அல்லாத பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க துவங்கின. தெற்கு ரயில்வே கணக்கெடுப்புபடி 7192 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 50 சதவீதம் பணியிடங்கள் குறைக்கப்படுவதால் தெற்கு ரயில்வேயில் 3596 ஊழியர்கள் எண்ணிக்கை குறையும்.
இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரனிடம் பேசியபோது, "60 ஆயிரம் ஊழியர்களை ரயில்வே குறைக்கிறது. கரோனா வருவாய் இழப்பு தற்காலிகமானதுதான். இதனைக் காரணம் காட்டி நிரந்தரமாக ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது தவறான நடவடிக்கை. ரயில்கள் விற்பனைக்காக ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது'' என்றார்.
இந்த நடவடிக்கையால் பாதுகாப்பில்லாத ரயில்வே பணித்துறைகளில் 50 சதவீத பணியாளர்கள் வேலையிழப்பார்கள் எனவும், தென்னக ரயில்வேயில் மட்டும் 4000 பணியிடங்கள் நிரப்பாமல் விடப்படுமெனவும் தெரிகிறது.
ஊழியர்கள் குறைப்பு நிர்வாக பணிகளைத் தேக்கமடையச் செய்வதோடு, கடும் வேலைப்பளு ஊழியர்களை மன உளைச்சலுக்கு தள்ளும். மேலும் இளைஞர்களுக்கு ரயில்வேயில் கிடைக்கவேண்டிய 60 ஆயிரம் அரசுத்துறை வேலைவாய்ப்புகளைப் பறிக்கும். ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கும் நடவடிக்கையை ரயில்வே அமைச்சகம் கைவிடவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.