'ஊரெல்லாம் சகுனம் சொல்லுமாம் பல்லி... கழுநீர் பானையில் விழுந்துச்சாம் துள்ளி' என்ற பழமொழி கணக்காக, காலி மனைகளில் கழிவுநீரை தேங்கவிட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் சேலம் மாநகராட்சி, தன்னுடைய அலுவலக வளாகத்தையே டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாற்றி இருப்பது முரணாக உள்ளதாக பொதுமக்கள் பகடி செய்கின்றனர்.
சேலத்தில் கடந்த சில நாள்களாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. சில இடங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்குவை பரப்பும் ஏடிஸ் ஈஜிப்ட் என்ற வகை கொசுக்கள், தேங்கி நிற்கும் சுத்தமான தண்ணீரில்தான் உற்பத்தி ஆகின்றன. ஓடும் நீரிலோ, சாக்கடையிலோ இவை வளர்வதில்லை. அதனால் வீடுகள், அலுவலகங்களில் நீர் தேங்காவண்ணம் பராமரிக்கும்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
குடியிருப்புகள், பொது இடங்களில் டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் குவளைகள், ஆட்டுரல்கள் உள்ளிட்டவற்றில் நீர் தேங்கியிராத வண்ணம் தூய்மையாக வைத்துக்கொள்ளும்படி தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறது, மாநகராட்சி நிர்வாகம்.
இந்நிலையில், செப். 18ம் தேதியன்று, 'காலி மனைகளில் முள்புதர்கள் இருந்தாலோ, குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தாலோ அவற்றை ஒரு வார காலத்திற்குள் அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த நிலத்தை மாநகராட்சி நிர்வாகமே சொந்த செலவில் சுத்தப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப சமுதாய க்கூடம், பொழுதுபோக்கு பூங்கா, மைதானம் அமைக்கப்படும்,' என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் கடுமையாக எச்சரித்து ஓர் அறிக்கை விடுத்திருந்தார். காலி நிலங்களில் தண்ணீர் தேங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் வரவேற்கப்படக்கூடியது தான் என்றாலும், சரிவர பராமரிக்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி, தனியார் பட்டா நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்த முடியுமா என்பது கடும் சர்ச்சையாகி இருக்கிறது. தவிர, மாநகராட்சி நிர்வாகமே தனக்குச் சொந்தமான இடங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்காமல் இருப்பதுதான் ஆகப்பெரும் முரணாக இருக்கிறது.
சேலம் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் அண்ணா மகப்பேறு மருத்துவமனை, பெண்களுக்கான ஆலோசனை மையம், கர்ப்பிணிகளுக்கான நல வாழ்வு மையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. மண்டல அலுவலகத்தின் கழிவுநீர்த் தொட்டி நிரம்பி அதிலிருந்து வழிந்தோடும் நீர், மகப்பேறு மருத்துவமனை எதிரில் திறந்தவெளி குட்டைபோல் தேங்கியுள்ளது. மேலும், மழைநீரும் அதில் கலந்து சிறு குளம்போல் காட்சி அளிக்கிறது.
நாள் கணக்கில் தேங்கியுள்ள இந்த நீரில் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கர்ப்பிணிகள், குழந்தைகள் வந்து செல்லும் மாநகராட்சி மருத்துவமனைக்கு எதிரிலேயே நோய் பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்யும் திறந்தவெளி தொழிற்சாலை உள்ளதை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமலும் இருக்கிறது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை இப்படியும் செயல்படுத்தலாமோ என்ற அய்யத்தையும் மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி இருக்கிறது. இதே வளாகத்தில், குப்பைத் தொட்டியும் மருத்துவக்கழிவுகளால் நிரம்பி வழிந்து காணப்பட்டது. பகல் 1 மணி ஆகியும்கூட குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது.
மருத்துவமனைக்காக தார் சாலை அமைக்கப்பட்டபோது, அந்த இடம் மேடாகவும், காலி நிலப்பரப்பு பள்ளமாகவும் ஆகிப்போனதில் மழைக்காலங்களில் நாள் கணக்கில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. தானாகவே வெயிலில் வற்றிப்போனால்தான் உண்டு. சாலையின் மட்டத்திற்கு காலி நிலப்பரப்பை உயர்த்தி, வடிகால் வசதிகள் செய்வதன் மூலம் மழைநீர் தேங்காவண்ணம் பராமரிக்க முடியும். மக்கள் நலன் விரும்பும் நிர்வாகம், நிச்சயமாக அதைத்தான் செய்திருக்கும். ஆனால், சேலம் மாநகராட்சி நிர்வாகம் மக்கள் நலன் என்ற மைய நோக்கில் இருந்து விலகி பலகாலம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.
கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிவது குறித்தும், திறந்தவெளியில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்தும் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் நேரில் நாம் புகார் அளித்தோம். அவர்களோ, 'இந்த புகார்களைக் கவனிப்பதற்கென இன்ஜினியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லுங்கள்,' என்றனர். அவர்கள், இன்ஜினியர்கள் இருக்கும் அறைக்கும் வழிகாட்டினர். ஆனால், நாம் சென்றபோது அந்த அறையில் ஒருவர்கூட இல்லை. இதையடுத்து, உதவி ஆணையரின் அலுவலக அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த கடைநிலை பெண் ஊழியர் ஒருவரிடம் கேட்டதற்கு, எல்லோரும் கேம்ப்பிற்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், ''காலி மனைகளில் தண்ணீர் தேங்கினாலோ, அசுத்தமாக இருந்தாலோ மாநகராட்சி அந்த நிலத்தைக் கைப்பற்றிக்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், மாநகராட்சிக்குச் சொந்தமான காலி நிலத்திலேயே கழிவுநீரும், மழைநீரும் நோய் பரப்பும் வகையில் தேங்கி இருக்கிறது. இந்த நிலத்தை மாநகராட்சி ஆணையர் மக்களுக்கு பட்டா போட்டு கொடுத்துவிடுவாரா?,'' என நக்கலாகக் கேட்டுவிட்டுச் சென்றனர்.