தமிழ் திரையுலகில் அவ்வப்போது புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகும் படங்கள் சில அடடே என்று சொல்ல வைக்கும். அப்படி அடடே என்று சொல்ல வைத்திருக்கும் பரோல் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவு கவர்ந்தது?
தாய் ஜானகி சுரேஷுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் ஆர்.எஸ்.கார்த்திக். இன்னொருவர் லிங்கா. இதில் மூத்த மகன் லிங்கா சிறுவயதிலேயே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று விட்டு திரும்பி கூலிப்படையாக பல கொலைகள் செய்து வருகிறார். இளைய மகன் ஆர்.எஸ். கார்த்திக் பிளம்பிங் வேலை செய்து கொண்டு வீட்டையும் தாயையும் கவனித்துக் கொள்கிறார். தாய் ஜானகி சுரேஷுக்கு மூத்த மகன் மேல் அதீத அன்பு. அவனை எப்படியாவது திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வருகிறார். அதேநேரம் தன் மூத்த மகன் மேல் இவ்வளவு அன்பாக இருக்கிறாரே என்று இளைய மகன் ஆர்.எஸ்.கார்த்திக்கு தாய் மேலும், தன் அண்ணன் லிங்கா மேலும் பொறாமை. இந்த நிலைமையில் இரட்டைக்கொலை செய்துவிட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று மூத்த மகன் லிங்கா ஜெயிலுக்கு சென்று விடுகிறார். மூத்த மகன் லிங்காவை எப்படியாவது விடுதலை செய்ய கருணை மனு கொடுக்க தாய் முயற்சி செய்ய, அதை இவர்கள் மேல் வெறுப்பாக இருக்கும் இளைய மகன் ஆர்.எஸ்.கார்த்திக் தடுக்கிறார்.
தான் தான் அம்மாவுக்கு முதன்மை மகனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்க, அந்த நேரம் பார்த்து அவரது தாய் ஜானகி இறந்து விடுகிறார். அண்ணன் மீது இருக்கும் பொறாமை, வெறுப்பினால் தன் தாய்க்கு தானே இறுதி சடங்கை அண்ணனுக்கு தெரியாமலேயே முடித்து விடலாம் என முடிவெடுக்கிறார் தம்பி ஆர்.எஸ்.கார்த்திக். ஆனாலும் சொந்த பந்தங்கள், நண்பர்களின் தலையீட்டினால் வேறு வழியின்றி தன் அண்ணன் லிங்காவை பரோலில் எடுக்க முயற்சிக்கிறார் தம்பி ஆர்.எஸ்.கார்த்திக். இதையடுத்து, அண்ணன் லிங்காவுக்கு பரோல் கிடைத்ததா, இல்லையா? அண்ணன் ஏன் இவ்வளவு கொடூர கொலைகாரனாக மாறினார்? தம்பி எடுத்த அதிரடி முடிவு என்ன? என்பதே இப்படத்தின் மீதி கதை.
ஒரு சின்ன கதையாக இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு சிறப்பாக திரைக்கதை அமைத்து அதை நேர்த்தியாகவும், ரசிக்கும்படியும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் துவாரக் ராஜா. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நேர்த்தியாகவும் பல்வேறு திருப்பங்கள் நிறைந்தும், ரசிக்கும்படி அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. ஆங்காங்கே பல இடங்களில் திரைக்கதை அமைத்த விதம் விக்ரம்வேதா திரைப்படத்தை நினைவு படுத்தினாலும் திரைக்கதையின் வேகமும், புதுமையான காட்சிகளும் அதில் நடித்த நடிகர்களின் யதார்த்தமான நடிப்பும், படத்திற்கு பக்கபலமாக அமைந்து தியேட்டரில் கைதட்டல் பெற்றுள்ளது. குறிப்பாக படம் எடுக்கப்பட்ட பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷனில் சரியான வகையில் காட்சிகளை தொகுத்து அதற்கு ஏற்றதுபோல் திரைக்கதையையும் முன்னுக்குப் பின் நான் லீனியரில் சிறப்பாக அமைத்திருப்பது படத்தை இன்னமும் சிறப்பாக மெருகேற்றி காட்டி இருக்கிறது.
நாயகர்கள் ஆர்.எஸ்.கார்த்தி, லிங்கா ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர். நாயகன் நாயகி கெமிஸ்ட்ரியைக் காட்டிலும் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. குறிப்பாக இவர்கள் இருவருடன் சேர்ந்து இவரது தாய் ஜானகி நடிப்பும் சிறப்பான முறையில் அமைந்து இவர்களின் கெமிஸ்ட்ரிக்கு மெருகூட்டி உள்ளது. நாயகர்கள் இருவரும் சின்ன சின்ன காட்சிகளில் கூட சரியான அளவில் முகபாவனைகளையும் நடிப்பின் அளவுகோலை சரிவர புரிந்து கொண்டு அழகாகவும் எதார்த்தமாகவும் அதை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக பல படங்களில் துணை நடிகராக நடித்திருக்கும் லிங்கா இப்படம் மூலம் சிறப்பாக நடித்து ரசிகர்களிடையே மனதில் பதியும்படி கவனம் பெற்று இருக்கிறார். படத்தின் இன்னொரு முதன்மை நாயகனான ஆர்.எஸ்.கார்த்திக் முந்தைய படமான என்னங்க சார் உங்க சட்டம் படம் மூலம் கவனம் பெற்ற அவர் இப்படம் மூலம் இன்னும் ஒரு படி மேலே போய் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களிடம் கவனம் பெற்று கைதட்டலும் பெற்று இருக்கிறார். இவர்களுக்கு அடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வக்கீலாக நடித்திருக்கும் நடிகை வினோதினி கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி யதார்த்தமான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கதைக்கும் கதை ஓட்டத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவரது வழக்கமான எதார்த்தம் கலந்த ஜனரஞ்சகமான நடிப்பு திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறது. நாயகிகள் கல்பிகா கணேஷ், மோனிஷா முரளி வழக்கமான நாயகிகளாக படத்தில் தோன்றினாலும் அவரவருக்கான வேலையை மிக எதார்த்தமாகவும் சிறப்பாகவும் செய்து விட்டு சென்றிருக்கின்றனர்.
சென்னையில் இருக்கும் லோக்கல் ஸ்லம்மை மிக எதார்த்தமாகவும் அதேசமயம் நேர்த்தியாகவும் படம் பிடித்து அந்த இடத்திற்கே நம்மை அழைத்துச் சென்று இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு திரைக்கதைக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ராஜ்குமார் அமல் இசையில் வரும் சின்ன சின்ன பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும் செண்டிமெண்ட் காட்சிகளிலும் சிறப்பான இசை மூலம் பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்திருக்கிறார்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு திருப்பங்கள் நிறைந்து சிறப்பான திரைக்கதை மூலம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்து அடடே என்று சொல்ல வைத்தாலும் படத்தின் இறுதியில் சில வரும் சில குழப்பமான காட்சிகள் மட்டும் இன்னும் கூட தெளிவாக காட்டி இருந்திருக்கலாம். இருந்தும் அது படத்தை பெரிதாக பாதிக்கவில்லை அதற்கு விஜய் சேதுபதியின் குரல் ஈடு செய்திருக்கிறது.
பரோல் - அடடே!