பக்கா - விமர்சனம்
ஊர் திருவிழாக்களில் பொம்மை வியாபாரியாக விக்ரம் பிரபுவும் அவருடன் என்ன செய்வதென்றே தெரியாமல் சூரியும் வலம் வருகிறார்கள். அப்படி ஒரு ஊர் திருவிழாவில் பொம்மைக் கடை போட்ட சமயத்தில் அந்த ஊர் நாட்டாமை மகள் பிந்துமாதவி விக்ரம் பிரபுவை பார்த்தவுடன் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிப்பது நாட்டாமைக்குத் தெரியவே பிந்து மாதவி வீட்டை விட்டு ஓடிப்போய் விக்ரம் பிரபுவை ஒவ்வொரு ஊர் திருவிழாக்களாக சென்று தேடுகிறார். அதே போல் ஒரு புறம் விக்ரம் பிரபுவும் பிந்து மாதவியைத் தேடுகிறார். இப்படி இருவரும் கண்ணாமூச்சி ஆடும் சமயத்தில் பிந்து கண்ணில் விக்ரம் பிரபு பட்டுவிட அது டபுள் ஆக்ஷனான இன்னொரு விக்ரம் என்ற உண்மை தெரியவருகிறது. அந்த விக்ரம் பிரபு அவர் ஊரில் தோனி ரசிகராக வலம் வருகிறார். அதே ஊரில் ரஜினி ரசிகராக நிக்கி கல்ராணி வருகிறார். இருவரும் காதலிக்கிறார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் அந்தக் காதலில் எதிர்பாராவிதமாக ஒரு சோகம் நிகழ்ந்துவிடுகிறது. அதிலிருந்து தோனி ரசிகர் விக்ரம் பிரபு எப்படி மீண்டார் என்பதைக் காணும்போது படத்தைப் பார்க்கச் சென்ற நாம் எப்படி மீள்வோம் என்பது கேள்விக்குறியாகிறது. இந்தக் கதையைப் படிக்கும்போதே சற்று 'கிர்ர்' என்றிருக்கிறது அல்லவா? பார்க்கும்போது கிறுகிறுப்பே வருகிறது.
சத்ரியன், வீர சிவாஜி, நெருப்புடா என்று கரியர் சற்று தொய்வாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தை எப்படி ஒத்துக்கொண்டார் விக்ரம் பிரபு என்பது தெரியவில்லை. கதையே இல்லாத இந்தப் படத்தில் ஓரளவுக்கு நடித்துள்ளார். இவரும் சூரியும், இன்னொரு விக்ரம் பிரபுவும் சதீஷும் வரும் காட்சிகள் அனைத்திலும் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்திருக்கிறார்கள். சிரிப்பும் வரவில்லை, சுவாரஸ்யமாகவும் இல்லை. நாயகியாக வரும் பிந்து மாதவி முகத்தில் காட்டிய உணர்ச்சிகளுக்கும், அவர் பேசிய வசனங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்த அளவுக்கு அவருடைய குரலுக்கேற்ற உதட்டசைவு உள்ளது. ஒன்றுக்கொன்று ஒட்டவே இல்லை. நிக்கி கல்ராணி பார்ப்பதற்கு பளிச்சென இருந்தும் அவர் கதாபாத்திரத்தில் அது இல்லை. படம் முழுவதும் மாஸ் காட்ட முயற்சி செய்து மொக்கை வாங்கியிருக்கிறார். அதுவும் அவருக்கு நிகழும் மொக்கையான சோக நிகழ்வில் அவர் கொடுக்கும் பாவனை சூர மொக்கை. மேலும் சிங்கம்புலி, முத்துக்காளை, ஆனந்தராஜ், ரவிமரியா, வையாபுரி, சிங்கமுத்து, என காமெடி நட்சத்திர பட்டாளமே இருந்தும் சிரிப்பு வருமான்னு எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெறுப்பே மிச்சம். அந்த அளவுக்கு இவர்கள் பங்கிற்கு ரசிகர்களை சோதித்துவிட்டுப் போகிறார்கள்.
1980-90களில் இப்படத்தை எடுத்திருந்தால் கூட இந்தப் படம் ஓடியிருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவு அரதப்பழசான கதையில் ட்விஸ்டுகள் என்ற பெயரில் ஏதேதோ வைத்து முன்னணி நட்சத்திரங்களை வைத்து ஒரு உப்புமா படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ். சூர்யா. இப்படத்தை ரசிக்க வைக்க இயக்குனர் படத்தில் அஜித், விஜய், ரஜினி, தோனி, நாட்டாமை சரத்குமார், நாட்டாமை டீச்சர் மற்றும் பல படங்களில் ஹிட்டான பாடல்கள் என அனைத்துயும் பயன்படுத்தியும் அவரது ராஜதந்திரங்கள் அனைத்துமே தவிடுபொடியாகின்றன. ரசிகர்களும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டு தியேட்டரைவிட்டு எப்படியாவது தப்பிப்பதிலேயே குறியாக உள்ளனர்.
ஒரு படத்தை இப்படி விமர்சிக்க வேண்டுமென்பது நம் விருப்பமல்ல. ஆனால், இத்தனை பேரின் உழைப்பும் பெரும் பணமும் ஈடுபட்டுள்ள ஒரு படத்தை இவ்வளவு அலட்சியமாக அவர்கள் எடுத்திருக்கும்போது இப்படித்தான் அந்தப் படத்தைப் பற்றி எழுத வேண்டியுள்ளது. கும்கி, இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு என்று தன் கரியரின் ஆரம்பக்கட்டத்தில் ரசிகர்களை ஈர்த்த விக்ரம் பிரபு, இப்படி சறுக்கி வருவது கவலைக்குரியது. கதைத் தேர்வில் மிகுந்த கவனம் தேவை.
இசையமைப்பாளர் சத்யா, எடிட்டர், கேமராமேன் என முப்பெரும் தூண்களும் இதில் என்ன செய்திருக்கின்றனர் என்று அவர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒண்ணுமே இல்லாத படத்தில், பாவம் இவர்கள் என்ன செய்ய முடியும்? காலம் கடந்த பழைய டெக்னிக்களையே இதில் பயன்படுத்தி கடமைக்கு வேலைபார்த்துள்ளனர்.
பக்கா... வச்சு செஞ்சுட்டீங்களே மக்கா!!!