Skip to main content

என்ன வகையான காதல் கதை? - ‘குஷி’ விமர்சனம்!

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

Kushi Movie Review

 

இந்திய சினிமாவில் அவ்வப்போது ஏதோ ஒரு காதல் காவியம் வெளியாகி ரசிகர்கள் மனதை வருடி வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது நேரடி காதல் காவியங்கள் வெளியாகி ஹிட் அடிக்காவிட்டாலும் சமீப காலங்களாக பேன் இந்தியா படங்களாக வெளிவரும் காதல் காவியங்கள் அனைத்து மாநிலங்களையும் கடந்து தமிழிலும் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவை மையப்படுத்தி தமிழில் வெளியாகியிருக்கும் பேன் இந்தியா படமான குஷி எந்த அளவு ரசிகர்களை ஈர்த்துள்ளது?

 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கடவுள் நம்பிக்கை இல்லாத விஜய் தேவரகொண்டாவுக்கு காஷ்மீரில் பணி நியமனம் செய்யப்படுகிறது. இதனால் அவர் காஷ்மீருக்கு செல்கிறார். அங்கு போன இடத்தில் முஸ்லிம் பர்தா அணிந்திருக்கும் சமந்தாவை பார்க்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு பார்த்த உடனேயே காதல் பற்றிக் கொள்கிறது. சமந்தாவை துரத்தி துரத்தி விஜய் தேவரகொண்டா காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவின் காதலை ஏற்றுக் கொள்ளும் சமயத்தில் தான் ஒரு ஆர்த்தடாக்ஸ் பிராமின் என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறார் சமந்தா. இதனால் இரண்டு பேர் குடும்பத்திலும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் செய்து கொள்ளும் இவர்களது வாழ்க்கையில் மத வழிபாடு ஒரு தடையாக வந்து நிற்கிறது. இதனால் இவர்களுக்குள் ஒரு பிரிவு ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா சமந்தா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிபிக்கல் சினிமாடிக் லவ் ஸ்டோரியை கொடுத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறார் நாயகன் விஜய் தேவரகொண்டா. நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அதே காதல் டெம்ப்ளேட்டில் உருவாகி இருக்கும் இந்த காதல் கதையில் வித்தியாசமாக கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கும் ஒருவருக்கும் இடையிலான காதல் என்ற புதுமையான விஷயத்தை உட்புகுத்தி அதற்குள் நடக்கும் உளவியல் ரீதியான பிரச்சனைகளையும், காதலையும், பாசத்தையும், பிரிவையும், நேசத்தையும் கலகலப்பாகக் கூறி படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் சிவ நிர்வாணா. ஆத்திகம் பேசும் சமந்தா குடும்பம், நாத்திகம் பேசும் விஜய் தேவரகொண்டா குடும்பம். இவர்களுக்கு இடையே நசுக்கப்படும் விஜய் தேவரகொண்டா - சமந்தா காதல் எப்படி மீண்டும் துளிர்விட்டு, இரு வீட்டார்களை சமாதானம் செய்து அதே சமயம் நாயகன் நாயகி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறது என்பதை கலகலப்பாகவும் ஜனரஞ்சகமாகவும் கூறி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும்படி செய்திருக்கிறார் இயக்குநர் சிவா நிர்வாணா.

 

முதல் பாதி முழுவதும் கலகலப்பான காதல் காட்சிகளாக நகர்கிறது. அது சற்றே நம்மை சோதிக்கும்படி இருந்தாலும் மனதை வருடும்படியான பாடல் காட்சிகளும் அழகாக காட்சி அமைக்கப்பட்ட காஷ்மீரின் அழகும் இதையெல்லாம் மறக்கடிக்கச் செய்து நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. ஆத்திகம் நாத்திகம் என்ற பிரச்சனை இரண்டாம் பாதியில் ஆரம்பித்து படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. இதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனைகளை மிக ஜனரஞ்சகமாகவும் நேர்த்தியாகவும் கூறிய இயக்குநர் அதற்கான சரியான தீர்வை கூறி படத்திற்கு பாஸ் மார்க் வாங்கி கொடுத்திருக்கிறார். நாயகன் விஜய் தேவரகொண்டா வழக்கம்போல் அழகாக இருக்கிறார் அளவாக நடித்திருக்கிறார். இவருக்கும் சமந்தாவுக்குமான கெமிஸ்ட்ரி மிக அழகாக அமைந்திருக்கிறது. இருவரும் மிக அழகாக தோற்றமளித்து மிகவும் சார்மிங்காக இருக்கின்றனர். அதற்கு இருவருடைய பிட்னஸ் லெவல் வெகுவாக உதவி புரிந்துள்ளது. இருவரும் கல்லூரி மாணவர்கள் போல் அவ்வளவு இளமையாக தோற்றமளிக்கின்றனர். அதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

 

காதல் காட்சிகளிலும் சரி திருமணம் ஆன பிறகு வரும் கணவன் மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் சரி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கின்றனர். காதல், பாசம், சண்டை, பிரிவு, நேசம் என ஒவ்வொரு உணர்வுகளுக்கு ஏற்றார் போல் தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். காமெடி காட்சிக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட வெண்ணிலா கிஷோர், பிரம்மானந்தா, ராகுல் ராமகிருஷ்ணா, முகமது அலி ஆகியோர் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தில் கலகலப்பை கூட்டி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்து திரையரங்கில் கைதட்டல் பெற்றுத் திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கின்றனர். விஜய் தேவர் கொண்டாவின் அப்பாவாக வரும் நாத்திகவாதி சச்சின் கெடேகர், சமந்தாவின் அப்பாவாக வரும் ஆத்திகவாதி முரளி ஷர்மா ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இப்படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். இவர்கள் இருவரும் சின்ன சின்ன வில்லத்தனம் காட்டி படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். இவர்களின் அனுபவ நடிப்பு சிறப்பாக அமைந்து படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

 

விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் கடவுள் பக்தியோடு நடித்து ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறார். சமந்தாவின் பாட்டியாக வரும் மூத்த நடிகை லட்சுமி அவருக்கான வேலையைச் சிறப்பாக செய்து ரசிக்க வைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் கதையின் திருப்புமுனையாக நடித்திருக்கும் ஜெயராம், ரோகிணி ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்தி கதைக்கும் திரைக்கதைக்கும் தூண் போல் நின்று காத்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடங்களில் நடித்த மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். ஹிருதயம் புகழ் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். இவரது பாடல்கள் இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அதுவே இந்த படத்தின் யூ.எஸ்.பியாக அமைந்து படத்தை கரை சேர்த்திருக்கிறது. அதேபோல் இவரது பின்னணி இசையும் காதல் காட்சிகள், குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் என அனைத்து காட்சிகளிலும் மிக அழகாக நம்முள் ஊடுருவி படத்திற்கு உயிரூட்டி உள்ளது.

 

முரளி. ஜி ஒளிப்பதிவில் காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், சமந்தா - விஜய் தேவரகொண்டா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது ஒளிப்பதிவும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஒரு காதல் படமாக பார்க்கும் பொழுது நாம் ஏற்கனவே பார்த்து பழகிய டெம்ப்ளேட்டில் இப்படம் இருந்தாலும், மனதை வருடும்படியான பாடல்களோடு படமும் ரசிக்கும்படி அமைந்துள்ளது இப்படத்திற்கு பிளஸ் ஆக மாறி படத்தையும் வெற்றிப் படமாக மாற்றி இருக்கிறது. அதேபோல் படத்தில் சொல்லப்பட்ட ஆத்திகம், நாத்திகம் சம்பந்தப்பட்ட மெசேஜும் இந்த கால காதலுக்கு ஏற்றார்போல் அமைந்திருப்பதும் படத்திற்கு இன்னொரு பிளஸ்.

 

குஷி - கலர்ஃபுல் காதல்!

 


 

சார்ந்த செய்திகள்