Skip to main content

ரொம்ப நாள் கழிச்சு ஷாம் வந்திருக்காரு... எப்படி இருக்கு படம்? காவியன் -  விமர்சனம் 

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

சில காலம் தமிழ் சினிமாவின் சார்மிங் நடிகர்களில் ஒருவராக இருந்த ஷாம் பிறகு தெலுங்கு பக்கம் பிஸியானார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தில்லாலங்கடி, பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை, ஒரு மெல்லிய கோடு ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த அவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் காவியன். சைக்கோ த்ரில்லர் படமான 'காவியன்' படத்தில் ஒரு சைக்கோ த்ரில்லர் படம்  எடுக்கத் தேவையான நான்கு விஷயங்களில் இரண்டு இருக்கிறது இரண்டு இல்லை. அது என்ன என்பதை கடைசியில் பார்ப்போம்.   

 

kaaviyan

 

கதைப்படி தமிழ்நாட்டில் அசிஸ்டன்ட் கமிஷனராக இருக்கும் ஷாம் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் ஆக இருக்கும் ஸ்ரீநாத் ஆகியோர் ஒரு ஸ்பெஷல் பயிற்சிக்காக அமெரிக்கா செல்கின்றனர். சென்ற இடத்தில் போலீஸ் அவசர உதவி எண் 911 மையத்தில் கால் சென்டர் அதிகாரியும், தன் முன்னாள் காதலியுமான புதுமுக நாயகி ஸ்ரீதேவியை ஷாம் சந்திக்க நேர்கிறது. இருவரும் தங்கள் காதலை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கும் வேளையில் அமெரிக்காவில் ஒரு மர்ம நபரால் அடிக்கடி பெண்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த குற்ற சம்பவங்களுக்கும் இவர்களின் காதலுக்கும் என்ன தொடர்பு, குற்றம் நின்றதா காதல் வென்றதா என்பதே காவியன் படத்தின் மீதி கதை.

 

kaaviyan

 

படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் பார்ப்பது போல் தோன்றினாலும் பழகிப்போன ஒரு கதையை திரில்லர் பாணியில் சொல்ல செய்துள்ள முயற்சி முழுதாகக் கைகொடுக்கவில்லை. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை ஆத்மியா கடத்தலுக்குப் பிறகு வேகமெடுக்க முயற்சி செய்து பின் திரும்ப மெதுவாய் முடிகிறது. நாம் பார்த்துப் பழகிய சைக்கோ கொலைகாரன் கதையை காரிலேயே பயணிக்கும்படி வித்தியாசமாக திரில்லர் பாணியில் காட்டி ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் பார்த்தசாரதி. வெகு சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் மற்றவை எல்லாம் சுவாரசியமற்ற எளிதில் யூகிக்கக்கூடிய காட்சிகள்தான்.  

 

kaaviyan

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றும் ஷாம் எப்போதும் போல் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார், நடிப்பிலும் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. கதாபாத்திரத்தின் தன்மைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்து நடித்துள்ளார். புதுமுக நாயகி ஸ்ரீதேவி கவனம் ஈர்க்க முயற்சி செய்துள்ளார். படம் முழுவதும் ஒரு காருக்குள்ளேயே வரும் அத்மியா நடிப்பில் அனுதாபம் ஏற்படுத்துகிறார். நடிப்பிலும் அடுத்து என்ன என்ற படபடப்பை ஏற்படுத்துகிறார். ஸ்ரீநாத் சிரிப்பு மூட்ட எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. மற்றபடி மர்ம நபர் உள்ளிட்ட மற்ற வெளிநாட்டு நடிகர்கள் எல்லோரும் அவரவர் வேலையை செய்துள்ளனர்.

 

 

ஷ்யாம் மோகனின் பின்னணி இசை படத்திற்கு உதவி புரிந்துள்ளது. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு மிகமோசமான நிலைக்கு சென்றுவிடாமல்  படத்தை பார்த்துக் கொள்கிறது.

 

சரி, 'காவியன்' படத்தில் இருந்த இரண்டு, இல்லாத இரண்டு என்ன? சைக்கோ த்ரில்லர் படம் எடுக்கத் தேவையான ஆசையும் அதற்குத் தேவையான செல்வமும் இருக்கிறது, முக்கிய தேவையான சுவாரசியமான கதையும் திரைக்கதையும் இல்லை.

 

சார்ந்த செய்திகள்