Skip to main content

ஜி.வி.பிரகாஷ் கொஞ்ச நாள் வேற மாதிரி இருந்தார், இப்போ திரும்பவும்... 100% காதல் - விமர்சனம்

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

2011ஆம் ஆண்டு நாக சைதன்யா - தமன்னா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 100% லவ் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது 100 % காதல். எந்நேரமும் படிப்பு படிப்பு என இருக்கும் ஜி.வி பிரகாஷ் அனைத்து விஷயங்களிலும் நம்பர் ஒன்னாகவே இருக்கிறார்,  எப்போதும் இருக்க விரும்புகிறார். ஊரில் இருக்கும் அத்தை மகள் ஷாலினி பாண்டே படிப்பிற்காக ஜி.வி.பிரகாஷ் வீட்டிற்கு வருகிறார். வந்த இடத்தில் படிப்பில் மந்தமாக இருக்கும் ஷாலினி பாண்டேவிற்கு ஜி.வி உதவி செய்கிறார். ஜிவியின் உதவியில் எப்போதும் பர்ஸ்ட் ரேங்க் வாங்கும் ஜி.வி.பிரகாஷை முந்தி ஷாலினி பாண்டே ஒரு பரிட்சையில் முதல் ரேங்க் வாங்கி விட ஈகோ பிரச்சனை வருகிறது. இந்த சின்ன பிரச்சனை எப்படி சரியானது, இதன் பிறகு இவர்களுக்குள் வரும் பெரிய பிரச்சனைகள் என்ன, சரியானதா இல்லையா என்பதே 100% காதல் படத்தின் மீதி கதை.

 

100% love



முழுக்க முழுக்க காதலர்களுக்குள் நடக்கும் ஈகோ பிரச்சனையை மட்டுமே மையமாக வைத்து உருவாகியுள்ளது 100% காதல். அதுவும் தற்போதைய ட்ரெண்ட்டில் இருந்து சில ஆண்டுகள் பின்தங்கிய ட்ரெண்டில் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 100% லவ் தெலுங்கு படத்தை அப்படியே பிரதிபலித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் படத்திற்கு வெறும் மைனஸா என்றால்...? இல்லை..! படத்தின் கரு வெறும் ஈகோவாக இருந்தாலும், படத்தின் காட்சிகள் முறைப்பெண் - மாமா, காதலில் படிப்பை மையப்படுத்தியுள்ளது என கலகலப்பாக ரசிக்கும்படியே உள்ளது. முதல் பாதி முழுவதும் குழந்தை நட்சத்திரங்கள் படத்தை கலகலப்பு குறையாமல் பார்த்துக்கொள்கின்றனர். இரண்டாம் பாதியில் அந்த வேலையை ஷாலினி பாண்டே கையிலெடுத்து கலகலப்பு குறையாமல் இருக்க முயற்சி செய்துள்ளார். அதுவும் ஷாலினி பாண்டேவின் வெகுளித்தனமான நடிப்பு படம் முழுவதும் நன்றாக எடுபட்டு நம்மை ஆங்காங்கே தேற்றுகிறது. படத்தில் கலகலப்பின் எல்லைகள் ஆங்காங்கே மீறப்பட்டும் உள்ளன.

ஜி.வி பிரகாஷ் கதாபாத்திரத்தோடு நன்றாக ஒன்றி நடித்துள்ளார். இடையில் சில படங்களில் வேறு வகை ஜி.வி.யை பார்த்தோம். இப்போது மீண்டும் முதல் பட காலத்துக்கு சென்றுள்ளார். காமெடிக்குப் பொறுப்பேற்ற தம்பி ராமையா, மனோபாலா ஆகியோர் கிச்சுகிச்சு மூட்ட முயற்சி மட்டுமே செய்துள்ளனர். முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நாசர், தலைவாசல் விஜய், ஆர்.வி.உதயகுமார், ஜெயசித்ரா, அப்புக்குட்டி, ரேகா ஆகியோர் தேவையான இடத்தில் தலையை காட்டி தங்கள் வேலையை நிறைவாக செய்துள்ளனர்.

 

 

g.v.shalini



ஜி.வி பிரகாஷ் இசையில் பாடல்கள் ஒலிக்கும்போது ஓ.கே என்று தோன்றி, முடிந்தவுடன் மறைந்துவிடுகின்றன. பின்னணி இசை நன்று. பொதுவாகக் காதல் படங்களின் ஜீவனாக அமைவது பாடல்களே. முதலில் பாடல்கள் வெற்றிபெற்று விட்டாலே படம் பாதி ஜெய்த்துவிடும். அதை இப்படம் செய்யத் தவறியுள்ளது. ஆர்.கணேஷின் ஒளிப்பதிவில் படம் ரிச்சாக தெரிகிறது.

ரீமேக் செய்வது தவறல்ல. அதை திறன்பட கையாண்டு, அதுவும் முக்கியமாக நீண்டநாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் என்றால் தற்போதுள்ள ட்ரென்டை மனதில் வைத்து சில மாறுதல்களை செய்து ரசிக்கும்படி கொடுத்தால் படம் நிச்சயமாக வெற்றிபெறும். அந்த வேலையை 80% சிறப்பாக செய்த இயக்குனர் சந்திரமௌலி இன்றைக்குள்ள ட்ரெண்டின் மேல் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் மீதமுள்ள 20% - த்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் இப்படம் இன்னும் கூட கண்டிப்பாக பேசப்படும் படமாக மாறியிருக்கும்.

100% காதல் - 100% வாங்கவில்லை, பாஸ் ஆகியிருக்கிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்