Skip to main content

ஹாட்ரிக் அடித்தாரா சிவகார்த்திகேயன்? எப்படி இருக்கிறது ப்ரின்ஸ்? - விமர்சனம்

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Did Sivakarthikeyan score a hat-trick? Prince  Review

 

டாக்டர், டான் வெற்றிகளுக்குப் பிறகு ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து ப்ரின்ஸ் படம் மூலம் தீபாவளி ரேஸில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அந்த ரேஸில் வெற்றி பெற்றாரா? இல்லையா?

 

பாண்டிச்சேரி, கடலூர் இடையே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஸ்கூல் டீச்சர் சிவகார்த்திகேயன் தேசபக்தி மிகுந்த அப்பா சத்யராஜோடு வாழ்ந்து வருகிறார். சிவகார்த்திகேயன், பள்ளியில் இங்கிலீஷ் ஆசிரியையாக வேலைக்கு சேரும் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மரியாவை காதலிக்கிறார். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மரியாவும் சிவகார்த்திகேயனை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுக்கிறது. இவர்கள் காதலை ஏன் இரு வீட்டாரும் எதிர்க்கிறார்கள்? இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி சிவகார்த்திகேயனும் மரியாவும் இணைந்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

 

இப்படிப்பட்ட ஒரு சிம்பிளான கதையை சின்ன சின்ன நகைச்சுவை வசனங்கள் மற்றும் அதேபோன்ற காட்சி அமைப்புகள் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் தெலுங்கு இயக்குனர் அனுதீப். படம் ஆரம்பித்து ஸ்லோ அன் ஸ்டெடியாகவே நகர்ந்து சென்று ஆங்காங்கே சில காட்சிகள் சிரிக்க வைத்தும், சில காட்சிகள் சோதிக்கவும் செய்து படம் முடிகிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் பளிச் என்று இருப்பது ஏதோ டிவியில் வரும் விளம்பரத்தை இரண்டரை மணி நேரம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனாலேயே காட்சிகளும், காட்சிகளுக்குள் இருக்கும் கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் விஷயங்கள் அழுத்தமாக இல்லாதது போல் தோன்றி பார்ப்பவர்களுக்கு சற்று அயர்ச்சி கொடுப்பது போல் இருக்கிறது. அதேபோல் காதல் காட்சிகளும், தேசப்பற்று சம்பந்தப்பட்ட காட்சிகளும் அழுத்தம் குறைவாக இருப்பதும் படத்திற்கு சற்று மைனஸாக அமைந்துள்ளது. இருந்தும் இதையெல்லாம் தாண்டி சிவகார்த்திகேயனின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் ஆட்டம் போட வைக்கும் பாடல் காட்சிகள் என சில பல விஷயங்கள் இளைஞர்களை ஈர்த்துள்ளது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது.

 

பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் ஜஸ்ட் லைக் தட் என்பது போல் வந்து சென்று ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளார். பாடல் காட்சிகளில் வழக்கம் போல் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை டான்ஸ் ஆட செய்துள்ளார். இவருக்கும் இங்கிலீஷ் ஆசிரியை மரியாவுக்குமான காதலும் கெமிஸ்ட்ரியும் அழகாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. உக்ரைன் நாட்டு நடிகையான மரியா தமிழ் உச்சரிப்பு மற்றும் அதற்கு ஏற்றார் போல் உதட்டசைவு மற்றும் முக பாவனைகளை சிறப்பாக வெளிப்படுத்தி சில இடங்களில் கைதட்டல் பெற்றுள்ளார். பொதுவாக காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரேம்ஜி இந்த படத்தில் மாறாக சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். ஊரில் உள்ள நிலங்களை எல்லாம் அபகரித்து மக்களை ஏமாற்றி அதில் தன் வாழ்க்கையை நடத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம்ஜி பார்ப்பதற்கு மெலிந்து காணப்பட்டாலும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். மரியாவின் அப்பாவாக நடித்திருக்கும் வெள்ளைக்காரர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சிவகார்த்திகேயன் அப்பாவாகவும் தேசபக்தி மிகுந்த மனிதராகவும் நடித்திருக்கும் சத்யராஜ் எப்போதும் போல் நக்கல், நையாண்டி உடன் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி அவருக்கான வேலையை சிறப்பாக செய்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளார். இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. வழக்கமான நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிராங்க்ஸ்டர் ராகுல், சதிஷ், ஃபைனலி பாரத் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி சென்றுள்ளனர். சிறப்பு தோற்றத்தில் வரும் சூரி சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்று எதிர்பார்த்தால் சற்று ஏமாற்றத்தையே கொடுத்து விட்டு சென்றுள்ளார். சின்ன வேடத்தில் நடித்திருந்தாலும் ஹலோ கந்தசாமி மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் மனதில் பதிகின்றனர்.

 

தமன் இசையில் குத்தாட்டம் போடும் பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசை ஓகே. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச் என்று இருப்பது ஏதோ பெரிய டிவி விளம்பரத்தை பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்துள்ளது.

 

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே மிக இன்னசென்டாக அமைத்து, அதற்கேற்றார் போல் திரைக்கதையையும் அமைத்த இயக்குனர் அதை இன்னமும் திறம்பட செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 

ப்ரின்ஸ் - வழக்கமான சிவகார்த்திகேயன் படம்!

 

 

சார்ந்த செய்திகள்