Skip to main content

உணவு கலப்படம்...! பேய் சித்தார்த்...! அருவம் - விமர்சனம்

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

அவள் ஹாரர் படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு சித்தார்த் தேர்ந்தெடுத்துள்ள அடுத்த ஹாரர் படம்.

 

aruvam

 

உணவு மற்றும் பாதுகாப்பு துறை உதவி கமிஷனராக இருக்கும் சித்தார்த் உணவு கலப்படத்தை வேறோடு அழிப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதனால் பல்வேறு தொழிலதிபர்கள் முதல் அரசியல் பெரும்புள்ளிகள் வரை பகையை சம்பாதிக்கிறார். இதற்கிடையே மூக்கில் நுகரும் தன்மை இல்லா குறைபாடுள்ள கேத்தரின் தெரசாவிற்கும் சித்தார்த்துக்கு காதல் ஏற்படுகிறது. அந்த நேரம் பார்த்து சித்தார்த் திடீரென இறந்து ஆவியாகிவிடுகிறார். அதன் பிறகு சித்தார்த் எப்படி, ஏன் இறந்தார், கேத்தரின் தெரசாவின் நிலை என்னவானது, உணவு கலப்படம் வேரோடு அரிக்கப்பட்டதா..? என்பதே அருவம் படத்தின் மீதி கதை.

 

இன்றைய உலகில் அசுரத்தனமாக பெருகி வரும் எண்ணெய், டீ தூள், பால், தினமும் உட்கொள்ளும் உணவில் இருக்கும் கலப்படங்கள் குறித்து அலசுகிறது அருவம். இந்த கலப்படங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள், மற்றும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் கேன்சர் போன்ற நோய் குறைபாடுகள் என சமூகத்துக்கு அவசியமான விஷயங்களை அதிரடியாக பேசியுள்ள இப்படம் அதை ஒரு ஹாரர் பார்முலாவுடன் கலந்து திரில் அனுபவமாக கொடுக்க முயற்சி செய்துள்ளது. படத்தின் முதல்பாதி முழுவதும் பயமுறுத்துவது, பழிவாங்கும் ஆவி, ஹீரோ, ஹீரோயின் காதல் காட்சிகள் என கிளிஷேவான காட்சியமைப்பில் நகரும் கதை இரண்டாம் பாதியில் சூடுபிடித்து உணவு கலப்பட விஷயங்களை தோலுரித்து காட்டுகிறது. குறிப்பாக சித்தார்த் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் காட்சிகள் மட்டும் படுவேகம். மற்றபடி உணவு கலப்பட சம்பந்தப்பட்ட காட்சிகளை கவனமாக கையாண்டிருக்கும் இயக்குனர் சாய் சேகர் அதை மற்ற காட்சிகளுக்கும் அப்பளை செய்திருந்தால் படத்தின் பெரும்பகுதி அயர்ச்சியை தவிர்த்திருக்கலாம்.

 

aruvam

 

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் பார்த்த அதே சித்தார்தாகவே இப்படத்திலும் பிரதிபலித்துள்ளார் நடிகர் சித்தார்த். பார்க்கும் வேலை மட்டும் இப்படத்தில் வேறுபடுகிறது. மற்றபடி கண்டிப்பான அதிகாரிக்கு ஏற்ற அதே தோற்றம், மிடுக்கு ஆகியவைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். ஸ்ட்ரிக்ட் ஆபிசர்களுக்கே உண்டான வசன உச்சரிப்போடு படம் முழுவதும் வலம் வந்துள்ளார்.

 

அன்னை தெரசா போல் கருணை உள்ளம் கொண்ட, சுத்தமாக மூக்கில் நுகர்வு தன்மையே இல்லாத வித்தியாசமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை கேத்தரின் தெரசா. இவருக்கு படத்தில் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் உள்ள கதாபாத்திரம். அதை ஓகே வாக செய்துள்ளார். படம் முழுவதும் சித்தார்த், பேய், கேத்தரின் தெரசாவே ஆக்கரமித்துள்ளதால் மற்ற கதாபத்திரங்களுக்கு அதிக வேலை இல்லை. வில்லன்களாக வரும் வேதாளம் கபீர் சிங், மதுசூதன் ராவ், ஸ்டண்ட் சில்வா ஆகியோர் வழக்கம்போல் மிரட்டியுள்ளனர். முக்கிய பாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், இளங்கோ குமரவேல் மற்றும் கிச்சிக்கிச்சி மூட்ட முயற்சி செய்த சதிஷ் ஆகியோர் சில நேரம் தலையை காட்டி செல்கின்றனர்.

 

aruvam

 

எஸ்.எஸ்.தமனின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை மிரட்டல். என்.கே.ஏகாம்பரம் பேய் பட டெம்பிளேட்டிலேயே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

நோய்களில் இருந்து விடுபட உணவே மருந்து என நம் முன்னோர்களின் வழியை பின்பற்ற விடாமல் தடுக்கும் உணவு கலப்படங்கள் எப்படி நமக்கு நோய்களை உருவாக்குகிறது. அதன்மூலம் எப்படி பெரும்புள்ளிகள் சம்பாதிக்கின்றனர் என்ற விழிப்புணர்வை தந்த இப்படம் அதை சரியான ஹாரர் பார்முலாவுடன் சுவாரஸ்யமாக கொடுக்க தவறியுள்ளது.

 

அருவம் - பேய் பட ரசிகர்களுக்கு இல்லை..!

 

சார்ந்த செய்திகள்