Skip to main content

உனக்கு எந்தப் பாகம் வேணும்? - நுட்பமான கேள்வியால் ஜெய் சங்கரை கதறி அழவைத்த சிவாஜி 

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், குலமா குணமா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

வழக்கமான விஷயங்களில் இருந்து மாறுபட்டு புதுமையாக சொல்லப்படுகின்ற விஷயங்கள் காலத்தைக் கடந்தும் நிற்கும். அந்த வகையில், இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய குலமா குணமா திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்து உங்களுக்கு கூறுகிறேன். இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் நாயகனாகவும், பத்மினி நாயகியாகவும் நடித்திருப்பார்கள். அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தக் கதையில் சிவாஜி கணேசனுக்கு தம்பியாக ஜெய் சங்கர் நடித்திருப்பார். குலமா குணமா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாரிடம் பல முறை வியந்து பேசியிருக்கிறேன். 

 

சிவாஜி கணேசன் அந்த ஊரில் எல்லோராலும் மதிக்கப்படக்கூடியவராக வாழ்ந்து கொண்டிருப்பார். அவனுடைய மனைவி பத்மினி.  சிவாஜி கணேசனின் தம்பி ஜெய் சங்கர். அவருடைய மனைவி வாணி ஸ்ரீ. வாணி ஸ்ரீயின் தந்தை நம்பியார், சிவாஜி கணேசனின் குடும்பத்தில் இருந்து பிரிந்து தன்னுடைய மகள் தனிக்குடித்தனம் செல்லவேண்டும் என்று விரும்புவார். அதன் மூலம், தன்னுடைய மகளுக்கு நிறைய சொத்து கிடைக்கும் என்று நினைப்பார். அப்படியான ஒரு சூழலையும் நம்பியார் உருவாக்கிவிடுவார். 

 

சொத்து பாகம் பிரிக்கும் அன்று அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் அனைவரும் வந்திருப்பார்கள். பெரியவர்கள் வீட்டில் பாகம் பிரிக்கிறார்கள் என்று ஊர் முழுக்க அது பற்றிய பேச்சாகவே இருக்கும். ஒரு பக்கம் சொத்துப்பத்திரங்கள், ஒரு பக்கம் பாத்திரங்கள், ஒரு பக்கம் நகைகள் அடுக்கி வைத்திருப்பார்கள். சிவாஜி தன்னுடைய தம்பியை அழைத்து, பாகம் பிரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதை நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செய்துதான் ஆகவேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. நான் இரண்டாக பாகம் பிரித்து வைத்துவிட்டேன். உனக்கு எது வேண்டுமோ எடுத்துக்கோ என்று கூறிவிட்டு ஓரத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்துகொள்வார்.  அனைத்துமே ஒரே பக்கத்தில்தானே உள்ளது, ஆனால் இரண்டாக பிரித்துவிட்டேன் என்று சிவாஜி கூறுகிறாரே என படம் பார்த்த அனைவருமே ஓரு நிமிடம் குழப்பம் அடைந்துவிட்டனர். 

 

படம் பார்த்தவர்கள் மட்டுமல்ல, ஜெய் சங்கரும் குழம்பிவிடுவார். தன்னுடைய மனைவியிடம் என்னடி இரண்டாக பிரிச்சுட்டேன்னு அண்ணன் சொல்றார். ஆனால், எல்லாம் ஒரே பக்கத்துலதான இருக்கு என மெல்லிய குரலில் கேட்பார். உடனே வாணி ஸ்ரீ, கொஞ்சம் கூர்ந்து கவனியுங்க. இரண்டாக பிரிச்சு வச்சுட்டேன்னு சொல்லி பெரியவர் ஒரு ஓரத்தில் சென்று உட்காருகிறார் பாருங்கள். நான் ஒரு பாகம், அந்த சொத்துகள் எல்லாம் ஒரு பாகம், உனக்கு எது வேண்டுமோ எடுத்துக்கொள் என்கிறார் என்று கணவரிடம் கூறுவார். பின்னர்தான் ஜெய் சங்கருக்கு சிவாஜி சொல்லவந்தது புரியும். சிவாஜி அருகே சென்ற ஜெய் சங்கர், அவர் காலுக்கருகில் அமர்ந்து இரண்டு பகுதியில் எனக்கு அந்தப் பாகம் வேண்டாம். இந்தப் பாகம்தான் வேண்டும் என்று சிவாஜி கையைப் பிடிப்பார். அந்தக் காட்சிக்கு திரையரங்கமே அதிரும். சொத்து சுகம் வேண்டாம், எனக்கு அண்ணன்தான் வேண்டும் என்பதை எவ்வளவு நுட்பமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார் பாருங்கள். இந்தப் படம் நூறு நாட்களைக் கடந்து ஓடியது என்றால் அதற்கு இந்தக் க்ளைமேக்ஸ் காட்சியும் முக்கிய காரணம்.

 

 

சார்ந்த செய்திகள்