நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் சமீபத்தில் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சி கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாக தெரிவித்த அவர் கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனுமதி கேட்டு த.வெ.க சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த மாதம் 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மாநாடு தொடர்பான 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்க புஸ்ஸி ஆனந்த் வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் மாநாடு தொடர்பாக காவல் துறையினரின் 21 கேள்விகளுக்கு த.வெ.க. சார்பில் பதில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், “மாநாட்டில் 50, 000 இருக்கைகள் போடப்படவுள்ளன. ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்படவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடகா, ஆந்திரா என மற்ற மாநிலங்களில் இருந்தும் தொண்டர் வருவார்கள். நண்பகல் 12 மணி முதல் இரவு 10 வரை மாநாடு நடைபெறும். மாலை 6 மணியில் இருந்து விஜய் பேசும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எந்த அரசியல் கட்சித் தலைவரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல் துறையினரின் அனுமதி கிடைத்தவுடன் மாநாடு திட்டமிட்டபடி மாநாடு ஏற்பாடுகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.