
மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி என்ற ஒன்றிய அரசின் அடாவடியை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ஒரு மொழிப் போராட்டத்திற்கான வழிவகுத்துள்ளது ஒன்றிய அரசு. பா.ஜ.க அல்லாத கட்சிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஒன்றிய அரசுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டி.ராஜேந்தரிடம் ‘வந்தே வந்தே மாதரம்’ பாடல் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.ராஜேந்தர், “மோனிஷா என் மோனலிசா படத்தை கலைஞர் முதல்வராக இருந்த போதும் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் எடுத்தேன். அப்போதே இந்தியில் பாடினேன். அன்னைக்கு ஏன் கேள்வி கேட்கவில்லை. கேள்வி தாமதம்” என்றார்.
பின்பு அவரிடம் தமிழ்நாட்டில் இந்தியில் பதாகை இருப்பது போல் வடநாட்டில் தமிழில் பதாகை இருக்கிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “பாம்பே, மும்பை, ஆந்திரா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் பதாகை இருக்கிறது. நான் இந்தியாவை தாண்டி உலகத்தை சுத்தி வந்தவன். நான் நியூயார்க் சென்ற போது தமிழ் சங்கம் தவிர எல்லோரும் ஆதரவு தந்தனர். அங்கு டாக்டர் மகேஷ் என்ற கன்னடர் அவர் உள்ளத்தை மட்டும் இல்லை இல்லத்தையே கொடுத்தார். நிறைய மலையாளம், தெலுங்கு மொழி சேர்ந்த மக்கள் எனக்கு உதவினார்கள். அப்போதுதான் நான் ஃபீல் பண்ணேன், ஹமாரா தேஷ் இந்தியா. அங்கு நிறைய இந்தியர்கள் என்னை தமிழர் என்று பார்க்காமல் இந்தியராக சப்போர்ட் பண்னாங்க. அதை பார்க்கும் போது எனக்கு புல்லரித்து விட்டது” என்றார்.