‘விடுதலை பாகம் 1’ வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பாகம் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களோடு மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
ஏற்கனவே முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் வரும் சில காட்சிகள் இணைக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது படக்குழு. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக சமீபத்தில் வெளியான இந்தபடத்தின் டரைலரில் வரும் காட்சிகளும் அதில் வரும் வசனங்களும் அமைந்திருந்தன. இப்படம் நாளை(20.12.2024) தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏ சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் என இருந்தது. பின்பு 8 நிமிடங்கள் குறைத்து 2 மணி நேரம் 45 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனம், படம் வெளியாகும் முதல் நாளான நாளை(20.12.2024) ஒரு காட்சி மட்டும் கூடுதலாக சிறப்பு காட்சியாக அனுமதிகக் வேண்டி அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது. இதனை பரீசிலித்த கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை காலை 9 மணிக்குச் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கியுள்ளார். மேலும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் மட்டும் திரையிட அனுமதி வழங்கியுள்ளார்.