
நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எமகாதகி’. இப்படத்தில் உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா மற்றும் ரூபா கொடவாயூர் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் கீதா கைலாசம் மற்றும் யூட்யூபர் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு இளம் பெண்ணின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை மையமாக வைத்துக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. முழுப் படத்தையும் தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். இப்படம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை கீதா கைலாசம், “எமகாதகி மிக முக்கியமான படம், பெப்பினுக்கு என் நன்றி. இந்தக்கதை சொன்னபோதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டயலாக் ஒரு இடத்தில் மட்டுமே இருந்தாலும், படம் முழுக்க எனக்கான இடம் இருந்தது. இந்த கேரக்டரை என்னை நம்பி தந்ததற்கு பெப்பினுக்கு நன்றி. ஒரு கிராமத்தில் கிட்டதட்ட 45 பேரும் ஒன்றாக இருந்தது மிக இனிமையான நினைவுகள், அந்த ஊர் மக்கள் எல்லோரும் நண்பர்களாகிவிட்டனர்.
35 நாட்கள் ரூபா டெட்பாடியாக நடித்தார் அவரது அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது என்னுடைய படம் என்று தான் எனக்கு தோன்றுகிறது. இப்படம் எப்போது ரிலீஸ் என மிகுந்த ஆவலுடன் இருந்தோம். இப்படம் மூலம் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும். இது பெப்பினின் முதல் படம் போலவே இல்லை, மிக நன்றாக எடுத்துள்ளார்” என்றார்.