பொங்கல் திருநாளை முன்னிட்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம், சுந்தர்.சி-யின் அரண்மனை 4, பாலாவின் வணங்கான் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்தனர். ஆனால் லால் சலாம் படம் பொங்கல் ரேசிலிருந்து பின்வாங்கி பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அரண்மனை 4, வணங்கான் உள்ளிட்ட படங்கள் எந்த அப்டேட்டும் இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்திற்குத் தமிழக அரசு சார்பில் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அயலான் படத்திற்கும் அதிகாலை காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு படக்குழுவினரும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாலை மற்றும் சிறப்பு காட்சி திரையிடலின் நேரம் குறித்து இன்னும் தெளிவாக அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு மற்றும் அதிகாலை காட்சியுடன் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாவதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மன நிலையில் உள்ளனர்.
கேப்டன் மில்லர் படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்க, சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அயலான் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க ரவிக்குமார் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.