'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்துள்ளார் பார்த்திபன். உலகிலேயே நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில், ஏ.ஆர் ரஹ்மான், பார்த்திபன், ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு, சமுத்திரக்கனி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, "கதை கேட்டு நிறைய படங்கள் பண்ணமுடியாமல் போயிருக்கிறது. எதற்கும் நான் வருத்தப்பட்டதில்லை. ஆனால், இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என்று இப்போதுவரை வருத்தப்படுகிறேன். இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கு ரொம்பவும் பிரம்மிப்பாக இருந்தது. இதை எப்படி சார் எடுப்பீங்க என்று பார்த்திபன் சாரிடம் கேட்டேன். எடுக்குறோம் என்றார். படத்தில் பணியாற்ற இருக்கும் சில டெக்னீஷியன்கள் பெயரையும் சொன்னார். மறுநாள் போனால் அந்த டெக்னீஷியன்கள் இல்லை. ஆட்கள் மாறிட்டாங்க என்று பார்த்திபன் சார் சொன்னார். உடனே நான், இந்தப் படம் பண்ண நிறைய சக்தி வேண்டும். நிறைய வலிகளைத் தாங்க வேண்டும். அவை உள்ள ஆட்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை இந்தக் கதை கழட்டிவிட்டுவிடும் என்றேன். கடைசியில் பார்த்தால் என்னையும் இந்தக் கதை கழட்டிவிட்டது. இப்படியொரு படம் எடுத்ததற்காக பார்த்திபன் சாரை வணங்குகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, உங்ககூடவே தான சார் சுத்திக்கிட்டு இருந்தேன். எந்த இடத்தில் நான் மிஸ் ஆனேன். என்னை ஏன் படத்தில் இருந்து கழட்டிவிட்டீங்க என பார்த்திபனிடம் சமுத்திரக்கனி கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த பார்த்திபன், "இந்தப் படத்திற்கு ஒத்திகை நடந்த அந்த 90 நாட்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தது. படத்தில் 'பாவம் செய்யாதே மனமே...' என்று ஒரு பாடல் இருக்கும். அப்படியொரு பாவத்தை நாம் செய்ய வேண்டாம் என்று நினைத்துத் தான் உங்களை படத்தில் நடிக்க வைக்கவில்லை" எனக் கிண்டலாக தெரிவிக்க, அரங்கத்தில் இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.