கல்யாணத்திற்கு பிறகு நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு படமான 'ரங்கஸ்தலம்' படம் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிபெற்றது. இதையடுத்து அவர் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் உருவாகும் 'மகாநதி' தெலுங்கு, 'நடிகையர் திலகம்' தமிழ் என்ற படத்திலும், சிவர்கார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஷாலுடன் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் வரும் மே 11ஆம் தேதி வெளியாகும் 'இரும்புத்திரை' படத்தின் அனுபவங்களை பற்றி சமந்தா பேசுகையில்.... "இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும். எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார். அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து , பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள். இன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலைதளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இரும்புத்திரை ரசிகர்களுக்கு சமூகவலைதளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும். விஷால் மற்றும் அர்ஜுன் சார் என்று இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி.
கல்யாணம் செய்துகொண்டால் நமது மார்க்கெட் போய்விடும் என்று நினைக்கும் ஹீரோயின்களுக்கு நான் முன் உதாரணமாக இருக்க விரும்புகிறேன். திருமணம் செய்து கொண்டும் நடிக்கலாம் என்ற தைரியம் எல்லா நடிகைகளுக்கும் வரவேண்டும். திருமணம் செய்தால் ஹீரோயின் அந்தஸ்து போய்டும் என்ற பயத்தை உடைக்க வேண்டும் என்ற கொள்கையோடு திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறேன். முதல் படம் 'ரங்கஸ்தலம்' மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து நடிகையர் திலகம், சீமராஜா, இரும்புத்திரை ஆகிய படங்களும் மிக பெரிய வெற்றி பெறவேண்டும். அது மட்டுமில்லாமல் இன்னும் பத்து படங்கள் நான் வெற்றி கொடுத்தால் தான் இந்த பயத்தை உடைக்க முடியும். அப்போது தான் நடிகைகளுக்கு திருமணம் செய்தாலும் நாயகியாக தொடரலாம், முன்னணியில் இருக்கலாம் என்ற தைரியம் வரும். வரும் காலங்களில் நாயகிகள் திருமணத்திற்கு பிறகும் எப்போதும் போல் நாயகியாக நடிப்பார்கள். அப்படி நடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருப்பேன்" என்றார் சமந்தா.