விஷாலின் அயோக்யா, ஃபைனான்ஸ் பிரச்சனைக் காரணமாக நேற்று படம் ரிலீஸாகாமல், பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இன்று வெளியானது. இதைபோலவே அதர்வா நடித்த 100 படமும் மே 9ஆம் தேதி ஃபைனான்ஸ் பிரச்சனையால் வெளியாகாமல், இன்று வெளியானது. கீ படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு நேற்று அறிவித்த தேதியில் வெளியானது. அதுவும் காலை காட்சி தடையாகி, மதியத்திலிருந்துதான் வெளியானது.
இத்திரப்படங்கள் மட்டுமல்லாமல் எங்கு சென்றாய் என் உயிரே, உண்மையின் வெளிச்சம், வேதமானவள், காதல் முன்னேற்றக் கழகம் ஆகிய படங்களும் நேற்று வெளியாகின.
இந்நிலையில் எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி. பாண்டி, தியேட்டர் வாசலில் நின்று கொண்டு தன் படத்தை பார்க்க வாங்க என்று ரசிகர்களை அழைத்து, தானே டிக்கெட் வாங்கி அதை குறைந்த விலைக்கு மக்களிடம் கொடுத்து படத்தை பார்க்க வைத்திருக்கிறார்.
மேலும், படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் விலையுடன் 100 ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். சிறு படங்களுக்கும் தயவு செய்து ஆதரவளியுங்கள் என்று பாண்டி பார்வையாளர்களிடம் கெஞ்சிக் கேட்டுள்ளார்.