சீனு ராமசாமி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். முதல் முறையாக இளையராஜாவும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 'ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ்' நிறுவனம் சார்பாக யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளரும், நடிகருமான ஆர். கே சுரேஷ் வாங்கியுள்ளார்.இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே சுரேஷ், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பல கேள்விக்கு பதிலளித்தனர். இதில் ஆர்.கே சுரேஷிடம் நிருபர் ஒருவர், சமீபகாலமாக தமிழ் படங்கள் எல்லாவற்றையும் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் மட்டும் தான் வெளியிடுறாங்க. ஆனால் இப்போது முதல் முறையாக நீங்கள் மட்டும் தான் தமிழ் படத்தை வெளியிடுகிறீர்கள், இதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை அல்லது அழுத்தங்கள் ஏதும் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "சினிமா வேறு, அரசியல் வேறு, சினிமாக்குள்ள அரசியலை கொண்டுவர வேண்டாம். இந்த இந்த படத்தையும் சிட்டியில் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் தான் வெளியிடுகிறது. இந்நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் முறையில் வருமானத்தை கொடுக்கின்றனர். அதனால் ரெட் ஜெயின்ட் நிறுவனத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது" என்றார்