Skip to main content

பாகுபலி எடுக்க எனக்கு 5 வருஷம்; இந்தப் படம் எடுக்க இவருக்கு 10 வருஷம் - பிரபல இயக்குநர் குறித்து வியந்த ராஜமௌலி

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

Rajamouli

 

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'பிரம்மாஸ்திரம்'. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், முதல் பாகம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை இயக்குநர் ராஜமௌலி வழங்குகிறார். இந்த நிலையில், பிரமாஸ்திரம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

 

நிகழ்வில் இயக்குநர் ராஜமௌலி பேசுகையில், “பிரமாஸ்திரம் இந்த ஆண்டின் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். இந்த ஆண்டின் என்று கூறமுடியாது, ஏனென்றால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே நாம் இதுவரை பார்க்காத அஸ்திரா உலகத்தை உருவாக்குவது குறித்து இயக்குநர் அயன் முகர்ஜி கற்பனை செய்துபார்த்திருக்கிறார். 

 

இந்தப் படத்தில் எந்த மெசேஜும் இருக்காது. சினிமா மீது மிகப்பெரிய வேட்கை கொண்டவர்கள் உருவாக்கிய படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படத்தை வழங்குகிறேன். பாகுபலி படத்திற்காக நான் 5 ஆண்டுகள் செலவிட்டபோது அந்தப் படத்தின் மீது நான் பேரார்வம் கொண்டிருப்பதாக நிறைய பேர் சொன்னார்கள். இயக்குநர் அயன் முகர்ஜி இந்தப் படத்திற்காக 10 ஆண்டுகள் செலவழித்திருக்கிறார். இயக்குநர் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்தேன். அவருக்கு எந்த வகையில் நாம் உதவலாம் என்று நினைத்து இந்தப் படத்தை வழங்குகிறேன். 

 

சினிமாவில் நம்முடைய கதைகளை பெரிய அளவில் சொல்லவில்லை. கடந்த 6 ஆண்டுகளாகத்தான் நம்முடைய கதைகளை சொல்ல ஆரம்பித்திருக்கிறோம். இனி அதுபோல் நிறைய கதைகள் வரும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்