
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் ‘எல்2; எம்புரான்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்புக்கு மத்தியில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 27ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
இப்படத்தில் சில காட்சிகள் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை சித்தரிப்பதாக சொல்லி வலதுசாரி ஆதரவாளர்கள் கூறினர். இதனால் சர்ச்சை ஆன நிலையில் படத்தில் 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு மோகன்லால் இந்த சர்ச்சை தொடர்பாக படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக கூறி வருத்தம் தெரிவித்தார். மேலும் படத்தில் இருந்து சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், “நாட்டின் மிக மோசமான இன அழிப்பு சம்பவத்தை படத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளதால், அது இதுபோன்று திட்டமிடும் சங் பரிவார் கும்பலை கோபமடையச் செய்துள்ளது. பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசிய படம் என்ற ஒரே காரணத்தால் ஒரு கலை படைப்பு அழிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பகிரங்கமாக படக்குழுவினருக்கு அச்சுறுத்தல் விடுப்பது கவலையளிக்கிறது” என தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். இதனிடையே முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்விராஜ் தொடர்ந்து முல்லை பெரியாறு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதாகவும் கூறி பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்தது. மேலும் அக்காட்சிகளை நீக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தது.
இந்த நிலையில் பிரித்விராஜின் தாயார் எம்புரான் பட சர்ச்சையால் தன் மகன் மட்டும் குறிவைக்கப்படுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கடந்த சில நாட்களாக 'எம்புரான்' படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையை நான் கவனித்து வருகிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் என் மகன் பிரித்விராஜ் என்பதைத் தவிர, எனக்கும் இந்தப் படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால்தான் சர்ச்சைகளுக்கு நான் பதிலளிக்கக் கூடாது என்ற கருத்தில் இருந்தேன். ஆனால், பிரித்விராஜ் எம்புரானை எடுத்து மோகன்லாலையும், ஆண்டனி பெரும்பாவூர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களையும் ஏமாற்றிவிட்டதாக சிலர் வேண்டுமென்றே வதந்தியைப் பரப்பியுள்ளனர். மேலும் சில ஊடகங்கள் இப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டுள்ளன. இந்தப் படத்தின் திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்பதை அறிந்ததும், சிலர் பிருத்விராஜைத் தனிமைப்படுத்தித் தாக்க முயற்சிப்பது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
இது ஒரு தாயின் வலி. நான் வெளிப்படையாகச் சொல்வதால் யாராவது என்னைக் கேலி செய்தாலும் பரவாயில்லை. மோகன்லாலோ அல்லது தயாரிப்பாளர்களோ பிரித்விராஜ் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறவில்லை. மோகன்லால் என்னுடைய தம்பி. எனக்கு லாலை சிறுவயதிலிருந்தே தெரியும். மோகன்லால் என் மகனைப் பல மேடைகளில் பாராட்டியுள்ளார். ஆனால், மோகன்லால் அல்லது தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமல் சிலர் என் மகனைப் பலிகடாவாக்க முயற்சிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இயக்குநர் பிருத்விராஜ் இந்தப் படத்துடன் தொடர்புடையவர்களை மட்டுமல்ல, எந்தப் படத்துடன் தொடர்புடைய யாரையும் ஏமாற்றவில்லை. இனி ஏமாற்றப்போவதும் இல்லை. எம்புரான் படத்தில் ஏதாவது பிரச்சனை இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதற்குப் படக்குழுவினர் அனைவரும் பொறுப்பாக வேண்டும். அவர்கள் அனைவரும் ஒன்றாக ஸ்கிரிப்டைப் படித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக படமாக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தார்கள், எல்லோரும் அதை ஒப்புக்கொண்டார்கள். படப்பிடிப்பு கட்டத்தில் காட்சிகளைத் திருத்த வேண்டியிருந்தால், எழுத்தாளர் முரளி கோபி எப்போதும் அதைச் செய்யத் தயாராக இருப்பார்... பின்னர் எல்லாம் முடிந்து படம் வெளியான பிறகு, அதற்கு பிருத்விராஜ் மட்டும் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?
எல்லா அரசியல் கட்சிகளிலும் அமைப்புகளிலும் உள்ளவர்களை அன்புடனும் மரியாதையுடனும் மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட சிலர் கடந்த சில நாட்களாக பிரித்விராஜை தனிமையில் தாக்கி வருகின்றனர். இதற்குப் பின்னால் சில திரைப்படத் தயாரிப்பாளர்களும் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அரசியலின் பெயரைப் பயன்படுத்தி அதிகார மையங்களிடமிருந்தோ அல்லது அமைப்புகளிடமிருந்தோ எந்தப் பதவிகளையோ அல்லது அங்கீகாரத்தையோ கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியம் எனக்கோ அல்லது என் குழந்தைகளுக்கோ இல்லை. அதுபோன்ற ஒன்று நடப்பதைத் தடுக்க இந்த வழியில் இது தொடரப்பட்டால், நான் அவர்களிடம் இதைச் சொல்கிறேன். பிரித்விராஜின் தந்தை பத்தாம் வகுப்பு படிக்கும் போது இறந்துவிட்டார். என் குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லித்தான் வளர்த்தேன். நாங்கள் அரசியலை நம்பி வாழும் மக்கள் அல்ல. நாங்கள் பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். அரசியல் சூழ்நிலைகளின் அழுத்தம் காரணமாக, இந்தத் தலைவர்களில் சிலர் தங்கள் கருத்துக்களை மாற்ற வேண்டியிருக்கலாம். ஆனால் அவரது கருத்துக்களையும் மதிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.