
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் ‘எல்2; எம்புரான்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்புக்கு மத்தியில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 27ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடியும் 5 நாட்களில் ரூ.200 கோடியும் வசூலை ஈட்டியுள்ளது.
இப்படத்தில் சில காட்சிகள் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தை சித்தரிப்பதாக சொல்லி வலதுசாரி ஆதரவாளர்கள் கூறினர். மேலும் வில்லனுக்கு பஜ்ரங் தல் அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கியின் பெயரை குறிக்கும் வகையில் பல்ராஜ் பஜ்ரங்கி என இருப்பதாக சுட்டிக்காட்டினர். இதனால் சர்ச்சை ஆன நிலையில் இது தொடர்பாக மோகன்லால் படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக கூறி வருத்தம் தெரிவித்தார். மேலும் படத்தில் இருந்து சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதனிடையே கேரள முதல்வர் பின்ராயி விஜயன் படக்குழுவினருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் படத்திற்கு வர தற்போது படத்தில் இருந்து கிட்டதட்ட மூன்று நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. அந்த புதிய பதிப்பு தான் தற்போது மறு தணிக்கை செய்து திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் வில்லன் பெயர் பல்ராஜ் பஜ்ரங்கி என்பதற்கு பதில் தற்போது பல்தேவ் என மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே முல்லை பெரியாறு அணை குறித்து தவறான காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்விராஜ் தொடர்ந்து முல்லை பெரியாறு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதாகவும் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் கண்டனம் தெரிவித்தது. மேலும் அக்காட்சிகளை நீக்க வலியுறுத்தி நாளை(02.04.2025) போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தது.
இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மலையாள திரையுலக உச்ச நட்சத்திரங்களான மோகன்லால், பிரித்திவிராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படத்தில் அடிப்படை ஆதாரமற்ற பொய் பரப்புரை காட்சிகளை அமைத்து கேரள மக்களிடையே தேவையற்ற பயத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.
ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுவிக்கின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சியைப் போக்கவே 1895ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள கிட்டத்தட்ட 2 இலட்சம் ஏக்கர் விளை நிலங்களின் பாசனத் தேவையை நிறைவு செய்வதுடன், தென்மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் கிடைக்கும் நீர் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகள் கேரளாவின் காய்கறி தேவையில் 80% நிறைவு செய்கிறது. தன்னுடைய சொத்துக்களை விற்று முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய மாமனிதர் ஜான் பென்னிகுவிக்கை தென் தமிழ்நாட்டு மக்கள் இன்றும் தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர்.
தென்தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு பல முறை தொடர்ந்த வழக்குகளைத் தீர விசாரித்த உச்சநீதிமன்றம் சிறப்புப் பொறியியல் வல்லுநர் குழுவை அமைத்து, முழுமையாக ஆய்வு செய்து, அணை மிகவும் உறுதியாக உள்ளதை தனது தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதன்பிறகும் கேரள அரசின் மறைமுக ஆதரவுடன் மலையாளத் திரைத்துறை தொடர்ச்சியாக இத்தகைய பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டு வருவது இரு மாநில மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கான சதிச்செயலேயாகும். இத்திரைப்படத்தில் மத ஒற்றுமை குறித்து பேசும் நீங்கள், இன வெறுப்பை விதைத்தது ஏன்?
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மலையாளிகள் சிறப்புறத் தொழில் நடத்தி வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று கேரளாவிலும் நீண்டகாலமாக தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு காய்கறி மட்டுமல்லாது, மணல் மற்றும் கனிம வளங்கள் ஒவ்வொரு நாளும் கொண்டு செல்லப்படுகின்றன. அதற்குப் பதிலாக கேரளாவிலிருந்து திருட்டுத்தனமாக மருத்துவக் கழிவுகளும், குப்பைகளும், தெருநாய்களும் ஏற்றிவரப்பட்டு தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் கொட்டப்படுகின்றன. இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் சகித்து, பொறுத்து தமிழர்கள் மனிதநேயம் காத்து வரும் நிலையில், அதனைச் சீர்குலைக்கும் செயலில் கேரளத்திரைத்துறை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இத்திரைப்படத்தின் கதாநாயகன் மோகன்லால் உள்ளிட்ட கேரளத்தின் பெரும் கலைஞர்களே தமிழ்நாட்டில் சொத்துக்கள் வாங்கி நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில், தமிழர்கள் ஏதோ மலையாள மக்களுக்கு எதிரிகள் போலவும், தமிழ்நாடு கேரளாவை அழிக்க முயல்வது போலவும் வன்மத்துடன் சித்தரிப்பது இனப்பகையைத் தூண்டி, இரு மாநில மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முனையும் திட்டமிட்ட சதியாகும். ஆகவே, எம்புரான் திரைப்படக்குழு உடனடியாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரைக் காட்சிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரை காட்சிகளை எம்புரான் திரைப்படக்குழு நீக்க வேண்டும்!
இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான… pic.twitter.com/zqj8zDQIjP— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) April 1, 2025