
சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சீரியல்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தி பிரமலமானவர் ஷர்மிளா தாபா. பின்பு திரைத்துறையில் நுழைந்து விஸ்வாசம், வேதாளம், சகலகலா வல்லவன் போன்ற படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த இவர் நடன உதவி இயக்குநர் ரகு என்பவரைத் திருமணம் செய்து சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ஷர்மிளா தாபா, தனது பாஸ்போர்ட் காலாவதி ஆன நிலையில் மீண்டும் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில், வியாசர்பாடி முகவரியைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பு பாஸ்போர்ட் பெற்ற போது அண்ணா நகர் முகவரியை அவர் கொடுத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இதில் முறைகேடு நடந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தது.
இந்த புகாரின் அடிப்படையில் ஷர்மிளா தாபா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.