இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாக வலம் வரும் ரஜினிகாந்த், கிட்டதட்ட ஐந்து தசாப்தங்களாக நடித்து கொண்டு வருகிறார். கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்த அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி இன்று தனது 74வது பிறந்தாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், “எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் ரஜினிக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்” என தனது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்துக் கூறியுள்ளார்.
இதையடுத்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “அன்பு நண்பர், ரஜினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க” என அவரது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல் எக்ஸ் வலைதளத்தில் தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், “பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ரஜினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.