இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது எல்.ஐ.கே.(லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் விக்னேஷ் சிவன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் பின்னணியில் பல்வேறு தகவல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று புதுச்சேரி சென்ற விக்னேஷ் சிவன் அமைச்சரை சந்தித்து, புதுச்சேரி கடற்கரை சாலையில் இருக்கும் `சீகல்ஸ்’ ஹோட்டலை ஏற்று நடத்த அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. அதை கேட்ட அமைச்சர், அதிர்ச்சியாகி அந்த ஹோட்டல் அரசுக்கு சொந்தமான ஹோட்டல் என்பதால் அதை தனியாருக்கு கொடுக்க முடியாது என்றும் அங்கு நிறைய ஊழியர்கள் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
பின்பு விக்னேஷ் சிவன், ஒப்பந்த அடிப்படையில் எதாவது கிடைக்குமா என கேட்டதாகவும் அதற்கு அமைச்சர் 2017ஆம் ஆண்டு ஏலத்தின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பதிலளித்ததாக பரவலாக பேசப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவன், புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று கேட்டுள்ளதாகவும் அதற்கு புதுச்சேரி துறைமுக வளாகத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய ஒரு பொழுது போக்கு மையம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துடன், ஜி.எஸ்.டி. சேர்த்து கட்டினால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறியதாக பரவலாக சொல்லப்படுகிறது. இதையடுத்து பழைய துறைமுக வளாகத்தை சுற்றிப் பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் சென்றிருக்கிறார்.