தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (12.12.2024) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. நாளை திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மழைப்பொழிவு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு என்.டி.ஆர்.எப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை அடிவாரப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒரே வீட்டில் ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் நாளை தீப விழாவிற்கான ஏற்பாடுகள் முன்புறமாக நடைபெற்று வரும் நிலையில் திருவண்ணாமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை அலுவலகத்தில் இருந்து 30 பேர் கொண்ட குழு திருவண்ணாமலை விரைந்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை அடுத்து மீட்புப் படையினர் அங்கு விரைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.