Skip to main content

கோபத்தில் மைக்கை வீசிய பார்த்திபன்; அதிர்ச்சி அடைந்த ஏ.ஆர் ரஹ்மான்

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

Parthiban threw mic iravin nizhal audio release event

 

'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஆஸ்கர் வின்னர்கள் கட்டா லங்கோ லியோன் என்பவர் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராகவும், கிரைக் மான் என்பவர் சவுண்ட் டிசைன் பணியிலும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மானுடன் சேர்த்து  மொத்தம் மூன்று ஆஸ்கர் வின்னர்கள் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில்  ஏ.ஆர் ரஹ்மான், பார்த்திபன், ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துரு, சமுத்திரக்கனி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இவ்விழாவில் பேசிய ஏ.ஆர் ரஹ்மான், இரவின் நிழல் படத்தை அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ எடுத்திருந்தால் உலகம் முழுவதும் கொண்டாடியிருப்பார்கள். பரவாயில்லை நாம் தமிழ்நாட்டில் கொண்டாடலாம். தமிழக திரை கலைஞர்களிடம் நிறைய திறமைகள் இருக்கின்றன. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்" எனத் தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து பார்த்திபன் பேசுகையில், அவரின் மைக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரியாக சத்தம் வரவில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன் தன் கையில் இருந்த மைக்கை தூக்கி வீசினார். பார்த்திபனின் இந்த செயலை பார்த்து ஏ.ஆர் ரஹ்மான் உட்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

அதன் பின் வேறு மைக்கில் பேசிய பார்த்திபன், "இப்படத்தின் முக்கால் புகழும் ஏ. ஆர் ரஹ்மான் சாருக்குத்தான். எல்லாரும் என்கிட்ட  எந்த தைரியத்தில் இந்த படத்தை பண்ணீங்கன்னு கேட்டாங்க. சாத்தியமா நான் ஏ.ஆர் ரஹ்மான் இருக்குற ஒரே தைரியத்துலதான் இந்த படத்தை எடுத்தேன். அவருடன் இணைந்த பணியாற்ற வேண்டும் என்பது எனது 20 ஆண்டுகால கனவு. ஒவ்வொரு வருடமும் ஒரு கதையை அவரிடம் சொல்வேன், ஆனால் அது ஏதோ ஒரு காரணத்திற்காக மறுக்கப்படும். ரொம்ப கவலையாக இருக்கும். கடைசியாக இரவின் நிழல் படம் இணைந்து பண்ணி முடிச்சுட்டோம். மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்