Skip to main content

ஸ்ரீரெட்டியை கிண்டலடித்த தயாரிப்பாளர்... எதிர்ப்பு தெரிவித்த பா.ரஞ்சித்! மேடையில் கருத்து மோதல் 

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

இயக்குனர் கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன் உள்பட பலரும் நடித்துள்ள 'பற' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் திரைத்துறையில் தனது அனுபவங்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொண்டார்.

 

srireddy



தொடர்ந்து அவர், "நீங்க யாரும் என்னை தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க செலவுல, நான் என் கருத்தையும் கொஞ்சம் சொல்லிக்கிறேன்" என்று கூறிவிட்டு "சமீபமாக ஆன்லைன்ல பெண்களும் ஒரு தப்பு பண்ணுறாங்க. பெரிய ஆளுங்களை தாங்கள் டச் பண்ண முடியலைன்னாலும் அவுங்கள பத்தி தப்பா சொல்லி டேமேஜ் பண்ணுறாங்க" என்று 'மீடூ' குறித்து விமர்சித்தார். பிறகு, " இதெல்லாம் ஸ்ரீரெட்டி என்று ஒரு பொண்ணு ஆரம்பிச்சது. அவங்க ஒழுக்கம் தவறாத ஆந்திர கண்ணகி" என்று கிண்டலாகக் கூறி "அவுங்கதான் இந்த டைரக்டர் என்னை கூப்பிட்டார். அந்த டைரக்டர் என்னை கூப்பிட்டார்னு சொன்னாங்க. நான் கேக்குறேன், நீ எத்தனை பேரை கூப்பிட்ட?" என்று பேசப்பேச பின்னே நின்ற பெண் தொகுப்பாளர் நெளிந்து ஒரு கட்டத்தில் திரும்பி நின்றுகொண்டார்.

தயாரிப்பாளர் ராஜன், "சமீபத்தில் குஷ்பூ ஒருத்தனை அடிச்சிருக்காங்க. அது கரெக்ட். அடிக்கணும், நம்ம பெண்களை தவறா பயன்படுத்த நினைச்சா அடிக்கணும். ஆனா, அந்த அடிப்படையில ஒரு பொண்ணு முந்தாநேத்து வைரமுத்துவை தரக்குறைவா பேசியிருக்கு. கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் வரிசையில் தமிழைக் காப்பாற்றுபவர் வைரமுத்து. அவரை இப்படியெல்லாம் சீண்டுவது தவறு. எவ்வளவு கஷ்டப்பட்டு உயர்ந்திருக்காங்க அவங்க. அவர்களைப் போய் ஒரு சின்ன ஆசைக்காக சிதைக்கிறீங்க? அப்படிப் பார்த்தால், என்கிட்டே சில ஆளுங்க இருக்காங்க, பார்த்துக்கங்க" என்று தொடர்ந்து மீடூ குறித்தும் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்த பெண்கள் குறித்தும் கடும் விமர்சனத்தை வைத்தார். இவருடைய பேச்சுக்கு கைதட்டல் எழுந்தது.

இவருக்குப் பின் நிகழ்ச்சியில் பேச வந்த இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குனரை வாழ்த்திவிட்டு இறுதியாக தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியது குறித்த தனது கருத்தை தெரிவித்தார். "அய்யா ராஜன் அவர்கள் பேசுனாங்க. அதுல பெண்கள் குற்றச்சாட்டு வைப்பதை பற்றி மட்டும் பேசுவது தவறு. அவர்களது குற்றச்சாட்டுகளை ஆராய வேண்டும், விசாரிக்க வேண்டும். சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் போக்கு நிறைந்திருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி இருக்கும்போது ஸ்ரீரெட்டி போன்றோர் குற்றச்சாட்டுகளை வைப்பதாலேயே அவர்களை குற்றம் செய்தவர்களாக பார்ப்பதும் அவர்களை குறை சொல்வதும் மிக மிக தவறு. இதை நான் எதிர்க்கிறேன். மகிழ்ச்சி" என்று கூறி தனது பேச்சை முடித்தார்.

பல மேடைகளில் ரஞ்சித், ஏற்கனவே பேசியவர்களின் கருத்தை மறுத்து பேசியிருக்கிறார், தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் நடந்த பல சினிமா விழாக்களில் மேடையிலேயே கருத்து பரிமாற்றங்களும் மோதல்களும் நடந்திருக்கின்றன.  

 

 

சார்ந்த செய்திகள்