ராம்பாலா இயக்கத்தில் சிவா, நிக்கி கல்ராணி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், நடிகை நிக்கி கல்ராணியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் நிக்கி கல்ராணி பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு,
”டார்லிங் படத்திற்கு பிறகு மீண்டும் அதே மாதிரி ஒரு பேய் படம் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இடியட் ஜாலியான ஒரு படமாக இருக்கும். இரண்டு மணி நேரம் ஜாலியாக சிரித்துக்கொண்டே படம் பார்த்த அனுபவத்தோடு வெளியே வரலாம்.
ஒரு நடிகராக காமெடி பண்ணுவது என்பது ரொம்ப கடினமான விஷயம். நம்மளே நம் மீது காமெடி பண்ணி மற்றவர்களை சிரிக்க வைப்பது என்பது பெரிய விஷயம். அதை சிறப்பாக செய்யக்கூடியவர் சிவா. அவருடன் இணைந்து நடித்ததும் சிறப்பாக இருந்தது.
நான் கதை கேட்கும்போது ஆடியன்ஸில் ஒருவராகத்தான் கதை கேட்பேன். சீரியஸான படங்களில் நடிப்பதைவிட காமெடியான படங்களில் நடிக்கத்தான் நான் அதிகம் விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் காமெடி படங்கள்தான் நான் அதிகம் விரும்பிப் பார்ப்பேன். அதேபோல கிராமத்து பொண்ணாக நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.
ட்ரைலரில் கமல் சாரின் விக்ரம் படத்தை கிண்டல் செய்வதுபோல வரும் காட்சிகளை இயக்குநர் ராம்பாலா சார்தான் வைத்தார். எனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இயக்குநர் சொன்னதை நான் நடித்தேன், அவ்வளவுதான். நடிப்பதற்கு முன்பே, 'சார் நானும் கமல் சார் ஃபேன்தான். ஏதாவது பிரச்சனை ஆகிருச்சுனா என்ன பண்றது' என்று கேட்டேன். அவர்தான், 'அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீங்க நடிங்க' என்றார். அதன் பிறகுதான் நான் நடிச்சேன்”. இவ்வாறு நடிகை நிக்கி கல்ராணி கூறினார்.