நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். மேலும், சில பிரபலங்கள் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்துவரும் நிலையில், சிம்புவின் 'ஈஸ்வரன்' மற்றும் ஜெயம் ரவியின் 'பூமி' படங்களின் நாயகி நடிகை நிதி அகர்வால் distributelove.org என்ற இணையதளத்தின் மூலம் மக்களுக்கு உதவிவருகிறார். இதுகுறித்து அவர் பேசும்போது....
“இந்தக் கரோனா தொற்றில் நெருங்கியவர்களை இழந்துவருகிறோம். பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது கவலை அளிக்கிறது. தினமும் நமக்கு நெருங்கிய யாரோ ஒருவரை இழக்கிறோம். கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு உதவ நான் தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கிறேன். இந்த அமைப்பின் இணையதளத்தில் பொதுமக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் போன்று என்ன வேண்டுமானாலும் பதிவிட்டு எங்களுக்குத் தெரிவிக்கலாம். அவர்களுக்கு முடிந்த அளவுக்கு எங்களால் உதவிகள் செய்யப்படும். கரோனா பாதிப்பு உதவிகளுக்காகவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்.