பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25ஆம் ஆண்டு திரைப்பயணம், இரண்டு நிகழ்வும் ஒரே நிகழ்வாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மணிரத்னம், வசந்த பாலன், கருணாஸ், ஜீ.வி.பிரகாஷ், சீனு ராமசாமி, விஜயகுமார், மாரி செல்வராஜ், மன்சூர் அலிகான், சிங்கம் புலி, நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான், மிஷ்கின், நித்திலன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாலாவை வாழ்த்தினர். மேலும் சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிவகுமார், இயக்குநர் பாலாவுக்கு தங்கச் செயினை அணிவித்து மகிழ்ந்தார்.
இதையடுத்து மேடையில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சரியாக போகாத நிலையில் அப்படியே சோர்வுடன் அண்ணன் பாலா ஆபீஸ் இருந்த தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன் அப்போது என்னை பார்த்து பாலா உள்ளே அழைத்து ஆறுதல் படுத்தினார். கண்ணீரும் விட்டார். அடுத்து உடனே என்னிடம் நான் தயாரிக்கும் படத்தை நீ இயக்குகிறாயா என்று ஒரே வார்த்தை தான் கேட்டார். அப்படி அவர் எனக்கு மறுவாழ்வு கொடுத்த படம் தான் பிசாசு. தோல்வியால் என் மீது எனக்கே நம்பிக்கை குறைந்திருந்த நிலையில் என்னை உற்சாகப்படுத்தி மேலே அழைத்து வந்தவர் அண்ணன் பாலா தான்” என்று கூறினார்.