Skip to main content

பிரபல நடிகரும் முன்னாள் எம்.பியுமான இன்னசென்ட் காலமானார்

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

Malayalam actor, ex MP Innocent passed away

 

பிரபல மலையாள நடிகரான இன்னசென்ட் நேற்று இரவு காலமானார் (75). மலையாள திரையுலகில் 5 தசாப்தங்களைக் கடந்துள்ள இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து புற்று நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அதையே ஒரு புத்தகமாகவும் எழுதியுள்ளார். பின்பு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து படங்களில் நடித்து வந்த இன்னசென்ட் இம்மாத முதல் வாரத்தில் தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தொற்று இருந்ததாகவும் பல உறுப்புகள் செயல்படாதது காரணமாகவும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திரைத்துறையில் 750க்கும் மேலான திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் 'லேசா லேசா', 'நான் அவளை சந்தித்த போது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்தவர். நகைச்சுவை தாண்டி முக்கியக் கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் 1979-1982 காலகட்டத்தில் முனிசிபாலிட்டி கவுன்சிலராகவும் 2014-2019 காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 

 

இவரது மறைவு மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்னசென்ட் கடைசியாக நடித்துள்ள ’பாசுவும் ஆல்புத்த விளக்கும்’ என்ற மலையாள திரைப்படம் அடுத்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் குறியீடு - நடிகை தற்கொலை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Bhojpuri actor Amrita Pandey passed awa

போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை அம்ரிதா பாண்டே. போஜ்புரி அல்லாது இந்தி படங்கள், வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில விளம்பரங்களில் கூட நடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் அவரது சகோதரி வீணா பாண்டேவின் திருமணத்திற்காக பீகாரில் உள்ள பாகல்பூரிற்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு அங்கேயே சில நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி பாகல்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அம்ரிதா பாண்டே, நேற்று முன்தினம் (27.04.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்ரிதா பாண்டேவின் தங்கை, அவரது அறைக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அம்ரிதா பாண்டே மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

சமீப காலமாக, அம்ரிதா பாண்டே தனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு அமையாததால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சையும் பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பாக அவரது வாட்ஸ் அப்பில், “அவளுடைய வாழ்க்கை இரண்டு படகுகளில் உள்ளது, நாங்கள் எங்கள் படகை மூழ்கடித்து அவளது பாதையை எளிதாக்கினோம்” என்ற வாசகம் அடங்கிய ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதனிடையே அம்ரிதா பாண்டேவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Next Story

‘மனிதர் உணர்ந்து கொள்ள...’ - மஞ்சும்மல் பாய்ஸின் ஓடிடி அப்டேட்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
manjummel boys ott update

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது. அது தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது. 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து ரஜினி, தனுஷ், விக்ரம், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இயக்குநர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டியிருந்தனர்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் இப்படம் பேசுபொருளாகவே மாறி, இப்படத்தின் தாக்கத்தினால் சுற்றுலா விரும்பிகள் பலரும் குணா குகையை நோக்கிப் படையெடுத்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனை படைத்தது. இதையடுத்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த 6ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. மே 5 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.