தமிழில் வெற்றிபெற்ற காஞ்சனா தொடர் படத்தின் முதல் பாகத்தை இந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்க அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு படத்திற்கு லக்ஷ்மி பாம் என பெயரிடப்பட்டிருந்தது. கடந்த வருடமே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாரக இருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. அதன்பின் இப்படம் ஹாட் ஸ்டாரில் நவம்பர் 9ஆம் தேதி நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், படத்தின் பெயர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. லக்ஷ்மி என்ற இந்து கடவுளின் பெயரோடு "பாம்" என்ற வார்த்தையை சேர்த்து பெயராக வைத்திருப்பது, அக்கடவுளை அவமதிப்பதுபோல் உள்ளது என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் "ஸ்ரீ ராஜ்புட் கர்னி சேனா" என்கிற அமைப்பு படத்தின் பெயரை மாற்றுமாறு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியது. அதில் இந்த படத்தை எடுப்பவர்கள், இந்து கடவுள் லக்ஷ்மியை வேண்டுமென்றே அவமதிப்பதற்காக லக்ஷ்மி பாம் என பெயர் வைத்துள்ளதாகவும், அப்பெயர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், எனவே படத்தின் தயாரிப்பாளர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படம், இந்துமத கடவுள்களை பற்றியும் சடங்குகளை பற்றியும் தவறான தகவல்களை தருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் படத்தின் பெயரில் இருந்து பாம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு,லக்ஷ்மி என படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.