சன் பிக்சர்ஸ் தயாரித்து விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படம் பான் இந்தியா படமாக ஏப்ரல் 13-ல் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது. இதனை அடுத்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 66' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், படப்பிடிப்பிற்காக சென்னைக்கு அருகில் மிக பெரிய பொருட்செலவில் செட் ஒன்றை அமைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'ராஷ்மிகா மந்தனா' நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. பிறகு தமன்னா நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது வந்திருக்கும் தகவலின் படி பிரபல ஹிந்தி நடிகை 'க்ரித்தி சனோன்' கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஹிந்தியில் வெளியான 'பரேலி கி பர்ஃபி', 'ஹவுஸ்ஃபுல் 4' போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். இத்தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழில் இவருக்கு இது முதல் படமாக அமையும். இதனை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.