ஜோதிகா 'மொழி' படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இயக்குனர் ராதாமோகன் டைரக்ஷனில் 'துமாரி சுலு' ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான 'காற்றின் மொழி' படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விதார்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 'காற்றின் மொழி' படத்தின் ரிலீஸ் வரும் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து பட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது.... "ஒவ்வொரு வாரமும் மழை பெய்வதுபோல் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசைக் கட்டியிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு படம் ரிலீசாகும். படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.