உத்ரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் ஏற்பட்ட சரிவில் 41 தொழிலாளர்கள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்க அரசு தீவிர முயற்சிகள் செய்தது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் மூலமாக சரிவு ஏற்பட்ட இடத்தில் துளையிட்ட நிலையில் அங்கு மேலும் சரிவு ஏற்பட்டது. பின்பு 3வது முயற்சியில் வெற்றிகரமாகத் துளையிட்டு ஆக்சிஜன், உணவு வழங்கப்பட்டது. அடுத்து எலி வளை தொழிலாளர்களின் முயற்சியில் குழி தோண்டி சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 பேரையும் மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. 17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டனர்.
இந்த மீட்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருந்தனர். 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து அந்த மகிழ்சியைப் பலரும் கொண்டாடினர். மேலும் மீட்கப்பட்டவர்களை மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த நிலையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை, தமிழக முதல்வர் மற்றும் புதுச்சேரி முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “உத்தரகாசியில் சுரங்கத் தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது. கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத் தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத் தக்கது.
17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்து கொள்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது.
கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும்…— Kamal Haasan (@ikamalhaasan) November 29, 2023